திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வி உரைகளைக் கேட்ட 11 இலட்சத்திற்கும்
அதிகமான மக்கள்
டிச.17,2014. டிசம்பர் 17, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 78வது பிறந்தநாளன்று,
அவர் வழங்கிய புதன் பொது மறைக்கல்வி உரை, 2014ம் ஆண்டிற்குரிய மறைக்கல்வி உரைகளை நிறைவு
செய்கிறது. இத்தருணத்தையொட்டி, 2014ம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய
மறைக்கல்வி உரைகளின் புள்ளிவிவரங்களை திருப்பீடம் இப்புதனன்று வெளியிட்டது. திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் தலைமைப் பணியில் இதுவரை 73 புதன் பொது மறைக்கல்வி உரைகளை வழங்கியுள்ளார்.
இவற்றில், 2014ம் ஆண்டில், 43 உரைகள் அவரால் வழங்கப்பட்டன. இவ்வுரைகளில் கலந்துகொள்ள
வந்திருந்த மக்களின் எண்ணிக்கையும் இந்தக் குறிப்பில் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, 2014ம்
ஆண்டில், திருத்தந்தையின் புதன் உரைகளைக் கேட்க வந்திருந்தோரின் மொத்த எண்ணிக்கை, 11
இலட்சத்து, 99 ஆயிரம். இவ்வாண்டு ஜூலை மாதம் மட்டும் திருத்தந்தை புதன் உரைகள் வழங்கவில்லை
என்பதைக் குறிப்பிடும் இந்த புள்ளிவிவர அறிக்கை, ஏனைய மாதங்களில் திருத்தந்தையின் உரையைக்
கேட்க வந்திருந்தோரின் எண்ணிக்கையை வெளியிட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில், மிக அதிக அளவில்
2,05,000 பேர் திருத்தந்தையின் புதன் உரைகளில் கலந்துகொண்டனர் என்றும், அதற்கு அடுத்தபடியாக,
மே மாதம் 1,95,000 பேரும், அக்டோபர் மாதம் 1,70,000 பேரும் கலந்துகொண்டனர் என்றும் இவ்வறிக்கையில்
கூறப்பட்டுள்ளது.