2014-12-17 16:18:03

எபோலா நோயுற்றோர் மன நிலையிலும் முழுமையான குணம் பெற முயற்சிகள் தேவை - கர்தினால் பீட்டர் டர்க்சன்


டிச.17,2014. எபோலா நோயினால் பாதிக்கப்பட்டோரின் உடலைக் குணமாக்கும் முயற்சிகளுடன், அவர்கள் மன நிலையில் முழுமையான குணம் பெறவும் முயற்சிகள் தேவை என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
எபோலா நோயினால் அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் மேற்கு ஆப்ரிக்க நாடுகளான Sierra Leone, Liberia, Guinea ஆகிய நாடுகளில், டிசம்பர் 16 இச்செவ்வாய் முதல், 18, இவ்வியாழன் முடிய, பயணம் மேற்கொண்டு வரும் திருப்பீட நீதி அமைதி அவையின் தலைவர், கர்தினால் பீட்டர் டர்க்சன் அவர்கள் இவ்வாறு கூறினார்.
எபோலா நோயினால் பாதிக்கப்பட்டிருப்போர் மத்தியில் பணியாற்றிவரும் தன்னார்வத் தொண்டர்களுக்கு, திருப்பீடத்தின் சார்பில் ஊக்கம் அளிக்கும் நோக்கத்துடன், பன்னாட்டு காரித்தாஸ் அமைப்பின் ஆலோசகர், அருள்பணி Robert Vitillo அவர்களுடன், கர்தினால் டர்க்சன் அவர்கள், இப்பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
எபோலா நோயினால் உயிரிழந்த பெற்றோர்களின் குழந்தைகள், இந்நோயினால் பாதிக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தாலும், அவர்களை மற்ற உறவினர்கள் ஏற்றுக்கொள்ள முன்வராத நிலையில், இக்குழந்தைகள் அனாதைகளாக விடப்பட்டுள்ளனர் என்று அருள்பணி Vitillo அவர்கள் கூறினார்.
உலக நலவாழ்வு நிறுவனமான WHOவின் கணிப்புப்படி, எபோலா நோயினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஏறத்தாழ 18,000 பேர் என்றும், இவர்களில் 6,500 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரியவருகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.