2014-12-16 15:26:28

திருத்தந்தை பிரான்சிஸ் : மனம் வருந்தும் இதயத்தை இறைவன் மீட்கிறார்


டிச.16,2014. மனம் வருந்தும் இதயத்தை இறைவன் மீட்கிறார், அதேவேளை, இறைவனில் நம்பிக்கை வைக்காதவர், தன்னையே கண்டனத்துக்கு உரியவராக ஆக்கிக்கொள்கிறார் என்று, இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் இச்செவ்வாய் காலை நிறைவேற்றிய திருப்பலி மறையுரையில் இவ்வாறு உரைத்த திருத்தந்தை, தாழ்மைப் பண்பு, இறைவனின் கண்களில் மனிதரைக் காக்கின்றது, அதேநேரம் பெருமையுடையோர் வீழ்ச்சியடைகின்றார் என்றும் கூறினார்.
இதற்குரிய சாவி இதயத்தில் இருக்கின்றது, தாழ்மையுள்ளவரின் இதயம், திறந்ததாய், மனம் வருந்துவதற்கு அறிந்துள்ளது, இவ்விதயம், திருத்தங்களை ஏற்று, இறைவனில் நம்பிக்கை வைக்கின்றது; தற்பெருமையுடையவரின் இதயம் இதற்கு எதிர் மாறானது, இது செருக்குடையது, திறந்த மனமில்லாதது, இதற்கு வெட்கமே கிடையாது என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்நாளைய முதல் வாசகமான செப்பனியா இறைவாக்குப் பகுதி (3:1-2;9-13) மற்றும் நற்செய்தியை (மத்.21,28-32) மையமாக வைத்து மறையுரையாற்றிய திருத்தந்தை, இவ்விரு வாசகங்களும் தீர்ப்பு குறித்து பேசுகின்றன, இத்தீர்ப்பு, மீட்பு மற்றும் கண்டனத்தைச் சார்ந்துள்ளது என்று கூறினார்.
இறைவாக்கினர் செப்பனியா விவரித்துள்ள சூழல், கலகம் செய்யும் நகரம் பற்றியது, எனினும், இங்கு தங்கள் பாவங்களுக்காக மனம் வருந்திய மக்கள் குழு ஒன்று இருந்தது, இக்குழு இறைவனின் மக்கள் ஆவார்கள், இவர்கள் தாழ்மை, ஏழ்மை, ஆண்டவரில் நம்பிக்கை ஆகிய மூன்று பண்புகளைக் கொண்டிருக்கின்றனர் என்று விளக்கினார் திருத்தந்தை.
நற்செய்தி வாசகம் தனது தந்தையின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்வதற்கு அழைக்கப்பட்ட இரு மகன்கள் பற்றிக் கூறுகிறது; ஒருவரின் இதயம் மனம் வருந்தாவிடில், இறைவார்த்தைக்குச் செவிசாய்க்காவிடில், திருத்தத்தை ஏற்காவிடில் இறைவனில் நம்பிக்கை வைக்காவிடில் அந்த இதயம் மனம் வருந்தாத இதயம் என்று எச்சரித்தார் திருத்தந்தை.
இதயத்தில் எந்த ஒதுக்கீடும் இன்றி, இறைவனுக்கு நமது முழு இதயத்தையும் திறப்பதற்கு வரம் கேட்போம் என மறையுரையில் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.