2014-12-16 15:26:45

டிசம்பர் 19, வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்படும் கிறிஸ்மஸ் குடில் திறப்பு


டிச.16,2014. “குடும்ப வாழ்வில் மகிழ்வையும், அமைதியையும் கொண்டுவருவதற்கு கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் இடையே பகிர்வுகள் அவசியம். இது செவிமடுப்பதற்கு எவ்வளவு முக்கியமானது!”என்ற வார்த்தைகளை, இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்படும் பெரிய அளவிலான கிறிஸ்மஸ் குடில், வருகிற வெள்ளிக்கிழமையன்று திறக்கப்படும் என்றும், இந்நிகழ்வு வெள்ளி மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இக்கிறிஸ்மஸ் குடிலுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரமும் இந்நிகழ்வில் ஒளியேற்றப்படும்.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அமைக்கப்படும் கிறிஸ்மஸ் குடில், கடந்த காலங்களில், டிசம்பர் 24ம் தேதி, கிறிஸ்மஸ் பெருவிழா திருவிழிப்புத் திருப்பலிக்கு முன்னரே திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் அழகுற வைக்கப்பட்டுள்ள கிறிஸ்மஸ் மரம், தென் இத்தாலியின் கலாபிரியா பகுதியிலிருந்து வத்திக்கானுக்கு வழங்கப்பட்டுள்ளது. இது 25 மீட்டர் உயரம் கொண்டது.
வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் பெரிய அளவிலான கிறிஸ்மஸ் குடிலும், கிறிஸ்மஸ் மரமும் வைக்கப்படும் பழக்கம் 1982ம் ஆண்டில் புனித திருத்தந்தை 2ம் ஜான் பால் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.