2014-12-15 16:37:26

கிறிஸ்து பிறப்பு விழாவன்று 5,000 பேரை மதம் மாற்ற அலிகாரில் ஏற்பாடு


டிச.15,2014. உத்திரப்பிரதேசம் அலிகாரில், வரும் 25ம் தேதி, கிறிஸ்து பிறப்பு விழா நாளன்று 'தாய் மதம் திரும்புதல்' என்ற நிகழ்ச்சியை நடத்தி, அதன் மூலம், 4,000 கிறிஸ்தவர்களையும், 1,000 முஸ்லிம்களையும், இந்து மதத்துக்கு மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் அங்கீகாரம் பெற்ற, 'தரம் ஜக்ரான்' என்ற அமைப்பினர், இதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அலிகாரைச் சுற்றியுள்ள பகுதிகளில், 2,000 முஸ்லிம்கள் உட்பட, 40 ஆயிரம் பேரை, தாய் மதத்துக்கு திரும்ப வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, அலிகாரில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., தலைவர்கள் ஏற்கனவே அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே, அலிகார் நகரில் இத்தகைய மதமாற்ற நிகழ்ச்சிக்கு முழுமையான தடை விதிப்பதாகவும், அந்நாளில் சரியானக் காரணமின்றி 4 பேருக்குமேல் ஒரே இடத்தில் கூடுவது தடைச் செய்யப்பட்டுள்ளதாகவும் அலிகாரின் உயர் காவல்துறை அதிகாரிகளுள் ஒருவரான மோகித் அகர்வால் தெரிவித்தார்.
ஆனால், இத்தடைக்கு எதிராக கண்டன ஊர்வலம் ஒன்றை நடத்த உள்ளதாக பஜ்ரங்தள் அமைப்பும், பாஜக பாராளுமன்ற அங்கத்தினர் யோகி ஆதித்யநாத்தும் அறிவித்துள்ளனர்.

ஆதாரம் : தினமலர்







All the contents on this site are copyrighted ©.