2014-12-13 14:05:58

புனிதரும் மனிதரே - இருண்டச் சிறையில் இறைவனோடு...


10 அடி நீளம், 6 அடி அகலம் கொண்ட ஓர் இருண்ட அறையில் 9 மாதங்கள் ஓர் அருள் பணியாளர் சிறைப்படுத்தப்பட்டார். காய்ந்துபோன ரொட்டித் துண்டும், நீருமே அவருக்கு உணவாகத் தரப்பட்டன. அவர் செய்த குற்றம் என்ன? தான் இணைந்த துறவுச் சபையில் நோய்போல் பரவியிருந்த குறைகளை அகற்ற முயன்றார். அதுவே அவர் செய்த 'குற்றமாக'க் கருதப்பட்டது.
தன்னைச் சிறைப்படுத்தியவர்களை மனதார மன்னித்தார், அந்த அருள் பணியாளர். இருண்டச் சிறையில் பலமுறை இறைவனைக் காட்சி கண்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் உருவம் ஒருமுறை அவர் மனக்கண்களில் தோன்றவே, அக்காட்சியை அவர் ஓவியமாக வரைந்தார். சிலுவையில் அறையுண்ட தன் மகனை, விண்ணகத் தந்தை மேலிருந்து காணும் கோணத்தில் அந்த ஓவியம் அமைந்திருந்தது. அதுவரை யாரும் கண்டிராத ஒரு கோணத்தில் சிலுவையைச் சித்திரித்த அந்த அருள் பணியாளரின் பெயர், சிலுவையின் புனித ஜான் (St John of the Cross).
தலைசிறந்த ஓவியர்களில் ஒருவரான சால்வடோர் தாலி (Salvador Dali) அவர்கள், இந்த ஓவியத்தால் உந்தப்பட்டு, 1951ம் ஆண்டு, சிலுவையில் தொங்கும் இயேசுவின் உருவை மேலிருந்து பார்க்கக்கூடிய கோணத்தில் அற்புதமாக வடித்தார். புகழ்பெற்ற அந்த ஓவியத்திற்கு அவர் அளித்த தலைப்பு... Christ of Saint John of the Cross, அதாவது, சிலுவையின் புனித ஜான் அவர்களின் கிறிஸ்து.
செல்வம் மிகுந்த குடும்பத்தில் பிறந்த ஜானின் தந்தை Gonzalo அவர்கள், ஓர் ஏழை அனாதைப் பெண்ணைத் திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் அவரை வெறுத்து ஒதுக்கினர். ஏழ்மையில் துன்புற்ற அக்குடும்பத்தில் 1542ம் ஆண்டு பிறந்த ஜான், தன் ஏழாவது வயதில் தந்தையை இழந்தார். 21வது வயதில், கார்மேல் துறவுச் சபையில் இணைந்த ஜான் அவர்கள், அத்துறவுச் சபையைப் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அவிலா நகர் புனித தெரேசாவுடன் இணைந்து பணியாற்றினார்.
புதுப்பிக்கும் பணியில் உருவான கருத்து வேறுபாட்டினால், சிலுவையின் ஜான் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின், சிறையிலிருந்து தப்பித்து, கார்மேல் சபையைப் புதுப்பிக்கும் பணியில் இன்னும் முழுமையாக ஈடுபட்டார்.
1591ம் ஆண்டு, டிசம்பர் 14ம் தேதி, தன் 49வது வயதில் இறைவனடி சேர்ந்த சிலுவையின் புனித ஜான் அவர்கள், கத்தோலிக்கத் திருஅவையின் மறைநூல் வல்லுனர்களில் ஒருவராக வணங்கப்படுகிறார். இவரது திருநாள், டிசம்பர் 14ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.