2014-12-13 16:25:21

பாக்தாத் முதுபெரும் தந்தை : புலம்பெயர்ந்துள்ள மக்கள் நாடு திரும்புவதற்காக உண்ணா நோன்புக்கு வேண்டுகோள்


டிச.13,2014. ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகளைவிட்டுப் புலம்பெயர்ந்த மக்கள் மீண்டும் அப்பகுதிகளில் வந்து குடியேற வேண்டும் என்பதற்காக, கிறிஸ்மஸ்க்கு முந்திய மூன்று நாள்களும் உண்ணா நோன்பு, செபம், தபம் ஆகிய பக்தி முயற்சிகளை அனைவரும் செய்யுமாறு கேட்டுள்ளார் ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை இரபேல் லூயிஸ் சாக்கோ.
அதேநேரம், ஐஎஸ் இஸ்லாமியப் படைகளின் அடக்குமுறைகளுக்கு அஞ்சி சொல்லமுடியாத துன்பங்களை அனுபவிக்கும் புலம்பெயர்ந்துள்ள மக்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் விதமாக, கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டுக் கொண்டாட்டங்களை, உலகப் போக்கில் சிறப்பிப்பதைத் தவிர்க்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார் பாக்தாத் முதுபெரும் தந்தை சாக்கோ.
Ankawa, Alqosh புலம்பெயர்ந்தோர் முகாம்களையும், Amadiya, Aqra கிராமங்களையும் பார்வையிட்ட பின்னர் இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், Zakhoவில் தான் சந்தித்த அருள்பணியாளர்கள் கடும் வேதனைகளை அனுபவிக்கின்றனர் என்றும் கூறினார்.
மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகளைவிட்டுப் புலம்பெயர்ந்த ஒரு இலட்சத்து இருபதாயிரத்துக்கு மேற்பட்ட கிறிஸ்தவர்கள் குர்திஸ்தானில் புகலிடம் தேடியுள்ளனர் என்றும் கூறிய முதுபெரும் தந்தை சாக்கோ அவர்கள், டிசம்பர் 22 திங்கள் தொடங்கி, 24ம் தேதி இரவு முடிய கடும் உண்ணா நோன்பு இருக்குமாறு கேட்டுள்ளார்.
மதியம் வரை உணவோ பானமோ எதையும் தொடாமல் Ba'utha" நோன்பு இருக்குமாறும் கூறியுள்ளார் முதுபெரும் தந்தை சாக்கோ.
Ba'utha நோன்பு என்பது, பழைய ஏற்பாட்டில் இறைவாக்கினர் யோனா நினிவே மக்கள் மனமாறச் செய்ததை நினைவுகூருவதாகும்.

ஆதாரம் : Fides








All the contents on this site are copyrighted ©.