2014-12-13 14:07:17

திருவருகைக்காலம் 3ம் ஞாயிறு மகிழும் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 "The Little Prince" என்பது அரிதான, அழகான கற்பனையும், கருத்தாழம் மிக்க உணமைகளும் நிறைந்த அற்புதக் கதை. ஏதோ ஒரு கோளத்திலிருந்து நம் பூமிக்கு வந்து சேரும் ஒரு குட்டி இளவரசனின் கதை. பூமிக்கு வந்த இளவரசன் ஒரு நரியைச் சந்திக்கிறான். நட்பு மலர்கிறது. ஒரேநாளில் நட்பை மலரச் செய்த அந்த சந்திப்பிற்கு பின், அடுத்த நாள் இளவரசன் வந்ததும், "நீ நேற்று வந்த நேரத்திற்கே இன்றும் வந்திருந்தால், ரொம்ப நன்றாக இருந்திருக்கும்" என்று நரி அவனிடம் உரிமையாய் சொல்கிறது. ஏன் அதே நேரத்திற்கு வரவேண்டும் என்று கேட்கும் இளவரசனுக்கு நரி சொல்லும் விளக்கம் அழகானது. "நீ தினமும் நாலு மணிக்கு வருவாய் என்று உறுதியாக எனக்குத் தெரிந்தால், நான் மூன்று மணிக்கே மகிழ்வாக இருக்க ஆரம்பித்துவிடுவேன். நீ ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நேரத்திற்கு வந்தால், என் மனம் தயாராக, மகிழ்வாக இருக்கமுடியாதே" என்று நரி சொல்கிறது. மனதுக்குப் பிடித்த ஒருவரை எதிர்பார்த்திருக்கும் வேளையில், நல்லதொன்று நடக்கப்போகும் வேளையில், அந்த நிகழ்வுக்காக, அந்த நண்பருக்காகக் காத்திருக்கும் நேரம் மிக ஆனந்தமானது. நிகழ்வுக்கு முன் உருவாகும் மகிழ்வு. இதை எல்லாரும் வாழ்வில் உணர்ந்திருப்போம்.
நான் வாழும் இயேசுசபை துறவு இல்லத்தில் பல அருள்பணியாளர்கள் 90 வயதைத் தாண்டியவர்கள். அவர்களில் ஒருவர் இங்கிலாந்திலிருந்து இங்கு வந்து பல ஆண்டுகளாகப் பணி செய்து ஒய்வு பெற்றிருப்பவர். ஒவ்வொரு வாரமும், ஞாயிறு மாலை நான்கு மணியளவில் அவரைக் காண ஒரு நண்பர் வருவார். அவரது வருகையைப் பற்றி இந்த அருள்பணியாளர் ஞாயிறு காலையிலேயே எங்களிடம் பேச ஆரம்பித்துவிடுவார். நிகழ்வுக்கு முன் உருவாகும் மகிழ்வு.

பொதுவாக, எந்தக் குடும்பத்திலும் குழந்தை ஒன்று பிறக்கப்போகிறது என்பது, மகிழ்வு கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கும். மனித சமுதாயம் என்ற குடும்பத்தில் இறைவன் ஒரு குழந்தையாய் பிறக்கப்போவதை மகிழ்வுடன் நாம் எதிர்பார்க்க, இன்றைய ஞாயிறு திருவழிபாடு நம்மை அழைக்கிறது.
திருவருகைக் காலத்தின் மூன்றாம் ஞாயிறு இது. இந்த ஞாயிறை, Gaudete Sunday அதாவது, மகிழும் ஞாயிறு என்று கொண்டாடுகிறோம். பிலிப்பியருக்கு எழுதிய திருமுகத்தில் புனித பவுல் அடியார் கூறியுள்ள இறை வார்த்தைகள், இன்றைய வழிபாட்டின் வருகைப் பல்லவியாக ஒலிக்கின்றன:
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்: மீண்டும் கூறுகிறேன், மகிழுங்கள்.... ஆண்டவர் அண்மையில் உள்ளார். (பிலிப். 4:4-5)
மகிழுங்கள், மீண்டும் கூறுகிறேன் மகிழுங்கள் என்று பவுல் அடியார் ஆணித்தரமாக வலியுறுத்திக் கூறுவது, மகிழ்வு என்றால் என்ன என்பதைச் சிந்திக்க நம்மைத் தூண்டுகிறது.

உண்மையான மகிழ்வு என்றால் என்ன என்பதைச் சொல்ல பல கதைகள் உண்டு. அவற்றில் ஒன்று அயர்லாந்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி சொன்ன கதை. இந்தக் கதையை, அவர் சொல்வதாகவேக் கேட்போம்:
பனி கொட்டிக் கொண்டிருந்த ஒரு நாள் மாலையில் என் வீட்டுக் கதவைத் தட்டியபடி ஒரு சிறுவனும், சிறுமியும் நின்றனர். அவர்கள் வறுமையில் இருந்தனர் என்பதை அவர்கள் அணிந்திருந்த உடையே பறைசாற்றியது. "உங்களிடம் பழையச் செய்தித்தாள்கள் உள்ளனவா?" என்று அக்குழந்தைகள் என்னிடம் கேட்டனர். அப்போதுதான் அவர்களது கால்களை நான் பார்த்தேன். உறையவைக்கும் பனியிலும் அவர்கள் அணிந்திருந்தது, மெலிதான செருப்புக்கள்.
அந்தச் செருப்புக்களைப் பற்றி நான் வாசித்தபோது, வறுமைப்பட்ட நாடுகளில், செருப்பேதும் அணியாமல் நடக்கும் பல்லாயிரம் மக்களை எண்ணிப்பார்த்தேன். குளிரிலிருந்தும், சுடும் வெயிலிலிருந்தும் காலடிகளைக் காத்துக்கொள்ள, சாக்குத் துணி, ‘பிளாஸ்டிக் பாட்டில்’, செய்தித்தாள், என்று பலவடிவங்களில் வறியோர் உருவாக்கிக் கொள்ளும் 'செருப்புக்கள்' என் நினைவுக்கு வந்தன. நம் கதையைத் தொடர்வோம்:
அக்குழந்தைகளை வீட்டுக்குள் வரச்சொன்னேன். அவர்கள் அணிந்திருந்த அழுக்கான செருப்புக்கள், பனியில் நனைந்திருந்ததால், ஈரமான, அழுக்கானச் சுவடுகளை வீட்டிற்குள் பதித்தன.
சுடச்சுட தேநீரும், சில பிஸ்கட்டுகளும் தந்தேன். அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, வீட்டுக்குள் சென்று, பழைய நாளிதழ்கள், அதோடு அவர்கள் அணிவதற்கு சில உடைகளையும், காலணிகளையும் கொண்டு வந்தேன். தேநீரை அருந்திய சிறுவன் என்னிடம், "நீங்கள் பணக்காரரா?" என்று கேட்டான். எனக்குள் எழுந்தது சிரிப்பு. நான் எவ்வளவு ஏழை என்பது அவர்கள் அமர்ந்திருந்த அந்த சோபாவைப் பார்த்தாலே தெரியும். நடுத்தர வருமானம் உள்ள என்னைப் பார்த்து அவன் அந்தக் கேள்வியை ஏன் கேட்டான் என்று புரியாமல், "நானா, பணக்காரியா? இல்லையே. ஏன் அப்படி கேட்கிறாய்?" என்று அவனிடமே கேட்டேன். அப்போது அவனது தங்கை என்னிடம், "நீங்கள் தேநீர் கொடுத்த இந்த கப்பும் தட்டும் ஒரே நிறத்தில் உள்ளன. அதனால், நீங்கள் பணக்காரராகத்தான் இருக்கவேண்டும் என்று நினைத்தோம்." என்று பதில் சொன்னாள் அந்தச் சிறுமி.

இதைச் சொன்னபின், நான் தந்தவற்றை எடுத்துக்கொண்டு அவர்கள் இருவரும் சென்றனர். என்னிடம் நன்றி என்று கூட அவர்கள் சொல்லவில்லை. அவர்கள் நன்றி சொல்லவும் தேவையில்லை என்பதை உணர்ந்தேன். சொல்லப்போனால், நான்தான் அவர்களுக்கு நன்றி சொல்லவேண்டும். என்னைப்பற்றி நானே இன்னும் அதிகமாகப் புரிந்து கொள்ளும்படி செய்த அவர்களுக்கு நான்தான் நன்றி சொல்லவேண்டும்.
அவர்கள் சென்றபின், அந்த கப்பையும் தட்டையும் பார்த்தேன். அவை ஒரே நிறத்தில் இருந்தது, அவர்கள் கண்களில், ஒரு பணக்காரியாக என்னைக் காட்டியது. ஆனால், என் கண்களில், என் எண்ணத்தில், நான் என் வறுமையைப்பற்றி மட்டுமே எண்ணி வருந்துகிறேனே என்று வெட்கப்பட்டேன். உண்ண உணவு, உடுத்த உடை, நான் வாழ ஒரு வீடு இவற்றைத் தந்த இறைவனை அப்போது நன்றியோடு எண்ணிப் பார்த்தேன்.
வீட்டைச் சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது, அக்குழந்தைகளின் நனைந்த, அழுக்கான பாதங்கள் விட்டுச்சென்ற சுவடுகளைச் சுத்தம் செய்யாமல் விட்டுவைத்தேன். நான் பணக்காரி இல்லையே என்று ஏங்கும்போதெல்லாம், அந்தப் பாதச் சுவடுகள், நான் எவ்வளவு பணக்காரி என்பதை மீண்டும் மீண்டும் எனக்கு நினைவுறுத்த வேண்டும் என்பதற்காக அந்தச் சுவடுகளை துடைக்காமல் விட்டுவைத்தேன்.
அன்று அவ்வீட்டில் பதிந்தன, இரு குழந்தைகளின் பாதங்கள்; அப்பெண்ணின் மனதில் பதிந்ததோ, அற்புதப் பாடங்கள்.
குழந்தை வடிவில் வரும் கண்ணனின் பாதங்களை வரைந்தால், வீட்டுக்குள் நல்லவை நடந்துவரும் என்று எண்ணுவது இந்திய மண்ணில் ஓர் அழகிய மரபு. குழந்தை வடிவில் இறைவன் வரும் இந்த கிறிஸ்மஸ் நேரத்திலும், அவரது பாதங்கள் நம் இல்லங்களிலும், உள்ளங்களிலும் பல அழகிய பாடங்களைப் பதி்த்துச்செல்ல வேண்டும். அந்தப் பாடங்களை நம் உள்ளங்களில் பதிக்க இந்த மகிழும் ஞாயிறு தரப்பட்டுள்ள வாசகங்கள் நமக்கு உதவியாக இருக்கும்.

உள்ளதை அனுபவித்து மகிழ்பவரே உண்மையில் செல்வந்தர்கள் (The truly rich are those who enjoy what they have) என்பது ஒரு யூதப் பழமொழி. இல்லாத தேவைகளை உருவாக்கி, இன்னும் அதிகம், அதிகமாய் பெறுவதில் மட்டுமே நமது கிறிஸ்மஸ் மகிழ்வு உள்ளது என்று வர்த்தக உலகம் சொல்கிறது. 'நான்' என்ற உலகை நிறைப்பதே மகிழ்வு என்று சொல்லும் வர்த்தக, விளம்பர உலகின் பாடங்களுக்கு முற்றிலும் நேர் மாறான பாடங்களை, உண்மையான கிறிஸ்மஸ் மகிழ்வைப்பற்றிய பாடங்களை இன்றைய ஞாயிறு வாசகங்கள் நமக்குச் சொல்லித் தருகின்றன.
நமது வாழ்வின் பொருளும், மகிழ்வும் நம்மிடமிருந்தல்ல, அடுத்தவரிடமிருந்து ஆரம்பமாகவேண்டும் என்பதை இறைவாக்கினர் எசாயா அவர்களின் வார்த்தைகள் முழங்குகின்றன:
இறைவாக்கினர் எசாயா 61: 1-3
ஆண்டவராகிய என் தலைவரின் ஆவி என்மேல் உளது: ஏனெனில், அவர் எனக்கு அருள் பொழிவு செய்துள்ளார்: ஒடுக்கப்பட்டோருக்கு நற்செய்தியை அறிவிக்கவும், உள்ளம் உடைந்தோரைக் குணப்படுத்தவும், சிறைப்பட்டோருக்கு விடுதலையைப் பறைசாற்றவும், கட்டுண்டோருக்கு விடிவைத் தெரிவிக்கவும் என்னை அனுப்பியுள்ளார். ஆண்டவர் அருள்தரும் ஆண்டினை முழங்கவும், நம் கடவுள் அநீதிக்குப் பழிவாங்கும் நாளை அறிவிக்கவும், துயருற்று அழுவோர்க்கு ஆறுதல் அளிக்கவும் என்னை அனுப்பியுள்ளார்.

தங்களையே மறந்து, மற்றவருக்காக உழைப்பவர்கள் பெறும் மகிழ்வு, 'நான்' என்ற சிறைக்குள் சிக்கிக்கொள்ளாது. இத்தகைய மகிழ்வுக்குத் தலைசிறந்த எடுத்துக்காட்டு, திருமுழுக்கு யோவான். தன்னைத் தேடி மக்கள் வந்தபோது, அத்தருணத்தைத் தனக்குச் சாதகமாக்கிக்கொண்டு, பேரும், புகழும் பெறுவதற்குப் பதில், தான் உலக மீட்பர் அல்ல, அந்த மீட்பர் வரும் வழியைக் காட்டும் கைகாட்டி மட்டுமே தான் என்பதை, திருமுழுக்கு யோவான் வெளிப்படையாகச் சொன்னார். இதைத்தான் இன்றைய நற்செய்தியில் நாம் வாசிக்கிறோம்:
யோவான் நற்செய்தி 1: 6-8, 19-20
கடவுள் அனுப்பிய ஒருவர் இருந்தார்; அவர் பெயர் யோவான். அவர் சான்று பகருமாறு வந்தார்... அவர் அந்த ஒளி அல்ல; மாறாக, ஒளியைக் குறித்துச் சான்று பகர வந்தவர்... நீர் யார்?” என்று கேட்டபோது அவர், “நான் மெசியா அல்ல என்று அறிவித்தார். இதை அவர் வெளிப்படையாகக் கூறி, மறுக்காமல் ஒப்புக்கொண்டார்.

தான் ஒளி அல்ல; அந்த ஒளியை மக்களுக்கு அடையாளம் காட்ட வந்தவர் என்று யோவானைப் பற்றி சொல்லப்பட்டுள்ள இவ்வரிகள், கிறிஸ்மஸைப்பற்றிய ஓர் உருவகத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. என் மனத்தைக் கவர்ந்த உருவகம் இது. நள்ளிரவில் இடி, மின்னலுடன் கூடிய புயல் ஒன்று வீட்டைச் சூழ்ந்தபோது, தனி அறையில் படுத்திருக்கும் தன் சிறுவயது மகன் பயந்துவிடுவானே என்று அவனைப் பார்க்கச் செல்கிறார் ஒரு தந்தை. அங்கு, இருளில் படுத்திருக்கும் மகனைக் காண ஒரு ‘டார்ச்’ விளக்கை எடுத்துச் செல்கிறார். அவர் கதவைத் திறந்து ‘டார்ச்’ விளக்கை அடித்ததும், சப்தம் கேட்டு, எழுந்த மகன் பயத்தில் "யாரது?" என்று கேட்கிறான். தந்தை உடனே அந்த ‘டார்ச்’ விளக்கை அவன் மீது அடித்து, அவனை இன்னும் பயத்தில் ஆழ்த்தாமல், அந்த டார்ச் ஒளியைத் தன் மீது திருப்பி, "மகனே, நான்தான்!" என்று சொல்கிறார். மகனும் அந்த ஒளியில் தந்தையைக் கண்டு பயம் தெளிகிறான். மகிழ்கிறான். இருள் சூழ்ந்த உலகில் தன் மீது ஒளியைத் திருப்பி, இதோ நான் வருகிறேன் என்று இறைவன் சொன்னதே கிறிஸ்மஸ் பெருவிழா. அந்த ஒளியை இறைவன் மீது திருப்பிய ‘டார்ச்’ விளக்கு திருமுழுக்கு யோவான்.
கிறிஸ்து பிறப்பு விழாவுக்கு நம் வீடுகளில் உயர்த்திக் கட்டும் விண்மீன்களைப் போல, நம்மிடம் ஒளிரும் இந்த உண்மையான மகிழ்வு, அனைவருக்கும் இறைவனை அடையாளம் காட்டும் மகிழ்வாக அமையட்டும். மகிழும் ஞாயிறு, இந்த உண்மையான, நிறைவான மகிழ்வை நமக்குத் தரும்படி குழந்தை இயேசுவை மன்றாடுவோம்.







All the contents on this site are copyrighted ©.