2014-12-13 16:24:59

திருத்தந்தை பிரான்சிஸ் நொபெல் அமைதி விருது ஆர்வலர்களுக்குப் பாராட்டு


டிச.13,2014. மக்கள் மத்தியில் அமைதியையும் உடன்பிறப்பு உணர்வையும் ஊக்குவித்து, இந்த நம் காலத்தில் போர் இடம்பெறும் இடங்களில் தீர்வுகளைக் காண்பதற்கு நொபெல் அமைதி விருது ஆர்வலர்கள் எடுத்துவரும் முயற்சிகளுக்கு தனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வெள்ளியன்று உரோம் நகரில் 14வது உலக உச்சி மாநாட்டைத் தொடங்கியுள்ள நொபெல் அமைதி விருது ஆர்வலர்களுக்குச் செய்தி அனுப்பியுள்ள திருத்தந்தை, இம்மாநாட்டில் பங்குகொள்ளும் அனைவரும் தங்களின் முக்கியமான இப்பணிகளில் ஊக்கம்பெற்று புதுப்பிக்கப்படவும், அவர்களின் உழைப்பு உலகில் அமைதியின் அபரிவிதமான அறுவடையைக் கொண்டுவரவும் வேண்டுமெனவும் தான் செபிப்பதாகக் கூறியுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இச்செய்தியை, திருத்தந்தையின் பெயரில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.
தென்னாப்ரிக்காவின் முன்னாள் அரசுத்தலைவர் நெல்சன் மண்டேலா அவர்களை கவுரவப்படுத்தும் நோக்கத்தில், இம்மாநாடு முதலில் தென்னாப்ரிக்காவில் நடைபெறுவதாய் திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இது உரோமைக்கு மாற்றப்பட்டது. இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ள இந்த மூன்று நாள் மாநாடு இஞ்ஞாயிறன்று நிறைவடையும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.