2014-12-13 16:23:36

திருத்தந்தை, இத்தாலிய பார்வையிழந்தவர்கள் தேசிய கழகத்தினர் சந்திப்பு


டிச.13,2014. புனித லூசியா விழாவான இச்சனிக்கிழமையன்று, இத்தாலிய பார்வையிழந்தவர்கள் தேசிய கழகத்தின் நூறு பிரதிநிதிகளைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித லூசியாவிடம் விளங்கிய மனித மதிப்பீடுகளை எடுத்துச் சொன்னார்.
பார்வையிழந்தவர்களின் பாதுகாவலராகிய புனித லூசியாவிடம் விளங்கிய துணிச்சல், குழு உறவு, தன்னையே வழங்கல் ஆகிய மூன்று பண்புகள் பற்றிக் கூறிய திருத்தந்தை, புனித லூசியா, உயிர்த்த கிறிஸ்துவிடமிருந்து பெற்ற துணிச்சலால் கடும் சித்ரவதைகளையும், மரணத்தையும் எதிர்கொண்டார் என்று கூறினார்.
வாழ்வின் சோதனைகளின்போது இத்தகைய துணிச்சல் நமக்குத் தேவைப்படுகின்றது, குறிப்பாக பார்வையிழந்தவர்கள் சோர்விழக்காமல், இறைவன் வழங்கியுள்ள திறமைகள் பற்றி அறிந்து அவற்றைப் பாராட்டி வளர்த்துக் கொள்ளுமாறும் கூறினார் திருத்தந்தை.
புனித லூசியா தனியாக இல்லை, கிறிஸ்தவ சமூகத்தின் துணையுடன் இருந்தார், அதேபோல், பார்வையிழந்தவர்களும் தனியாக இல்லை, அவர்களுடன் இந்தக் கழகம் இருக்கின்றது என்று உணருமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.