2014-12-13 16:24:45

டிசம்பர் 13, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் குருத்துவ திருநிலைப்பாட்டு நாள்


டிச.13,2014. “இன்று எனது குருத்துவத் திருநிலைப்பாட்டு நாள். எனக்காகவும், அனைத்து அருள்பணியாளர்களுக்காகவும் தயவுகூர்ந்து செபியுங்கள்” என்ற வார்த்தைகளை, இச்சனிக்கிழமையன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
1969ம் ஆண்டு டிசம்பர் 13ம் தேதி குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனது 45வது ஆண்டை இச்சனிக்கிழமையன்று நினைவு கூர்ந்தார்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, அவரது அர்ஜென்டீனா மக்களின் அன்பு மட்டுமல்லாமல், உலகில் பெருமளவான மக்களின் ஆதரவும், அன்பும் தொடர்ந்து இருக்கின்றது என்று, இவ்வியாழனன்று வெளியான ஓர் ஆய்வு கூறுகிறது.
பியூ ஆய்வு மையம் 43 நாடுகளில் நடத்திய ஆய்வில், அறுபது விழுக்காட்டு மக்கள் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்மீது நல்லெண்ணம் கொண்டிருக்கின்றனர் என்றும், 78 விழுக்காட்டு அமெரிக்கர்கள் இதேபோன்ற நல்லுணர்வைக் கொண்டிருக்கின்றனர் என்றும் தெரிய வந்துள்ளது.
இரண்டாவது ஆண்டாக கத்தோலிக்கத் திருஅவையை வழிநடத்திச் செல்லும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் எளிமையான வாழ்வு பலரைக் கவர்ந்துள்ளது என்றும், மொத்தத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் புயல் உலகில் தொடர்ந்து வீசிக் கொண்டிருக்கின்றது என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
2013ம் ஆண்டில் பல பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் இடம்பிடித்த திருத்தந்தை, தொடர்ந்து பல பத்திரிகைகளின் அட்டைப்படங்களில் பிரசுரமாகி வருகிறார், சமயத் தலைவர்கள் பொதுவாக இவ்வாறு இடம்பிடிப்பதில்லை எனவும் Pew மையம் எடுத்த ஆய்வு தெரிவிக்கின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி/ CNS








All the contents on this site are copyrighted ©.