2014-12-13 16:24:51

குவாதலூப்பே அன்னை, அமெரிக்காவுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்த மிகப்பெரும் மறைபோதகர்


டிச.13,2014. 1531ம் ஆண்டில் புனித ஹூவான் தியெகோ அவர்களுக்கு, குவாதலூப்பே அன்னை மரியா காட்சி கொடுத்ததன்மூலம், குவாதலூப்பே அன்னை மரியா, அமெரிக்காவுக்கு நற்செய்தியைக் கொண்டுவந்த மாபெரும் மறைபோதகராக மாறியிருக்கிறார் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அமெரிக்காவின் பாதுகாவலரான குவாதலூப்பே அன்னை மரியா விழா நாளான இவ்வெள்ளி மாலை ஆறு மணிக்கு வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு கூறினார்.
இறைவனின் மன்னிப்பை இறைஞ்சி, அவரின் கருணையில் நம்பிக்கை வைத்து இலத்தீன் அமெரிக்காவுக்காகச் செபித்த திருத்தந்தை, இக்கண்டத்தினர் எதிர்காலத்தை நம்பிக்கையோடு நோக்கவும், ஏழைகளுக்கும் துன்புறுவோருக்கும் வளர்ச்சியும் வாய்ப்புகளும் கிடைக்கும்படியாகவும் அன்னை மரியிடம் மன்றாடுவதாகத் தெரிவித்தார்.
நீதி மற்றும் பரிவன்புக்காகத் தாகம் கொண்டு, கிறிஸ்துவுக்காகத் துன்புறுத்தப்படுவோருக்கும், அமைதிக்காக உழைப்போருக்கும் இறைவனின் உதவியை மன்றாடினார் திருத்தந்தை.
அமெரிக்கக் கண்டத்தைச் சார்ந்த அரசியல் தூதர்கள், திருஅவைத் தலைவர்கள் என ஆயிரக்கணக்கானோர் இவ்விழாத் திருப்பலியில் கலந்துகொண்டனர்.
அமெரிக்கக் கண்டத்தின் பாரம்பரிய இசைக் கருவிகளைக் கொண்டு திருப்பலி பாடல்கள் பாடப்பட்டன. அர்ஜென்டீனா நாட்டுப் புகழ்பெற்ற பாடகர் பத்ரீசியா சோசா அவர்களும் இத்திருப்பலியில் பாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.