2014-12-13 16:25:55

இலங்கையில் தேர்தல் வன்முறைகள் அதிகரிக்கின்றன, கண்காணிப்பு அமைப்பு


டிச.13,2014. இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இதுவரை, துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் உட்பட தேர்தல் சட்டங்கள் மீறப்பட்ட 107 செயல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் கண்காணிப்பில் ஈடுபட்டுவரும் கஃபே (CaFFE) அமைப்பு தெரிவித்துள்ளது.
இதில் 32 வன்முறை நிகழ்வுகள் என அந்த அமைப்பின் செயல்திட்ட இயக்குனர் Rajith Keerthi Tennakoon தெரிவித்தார்.
குறிப்பாக, வேட்பு மனுத் தாக்கல் முடிந்த தினத்திற்குப் பின்பு வன்முறை நிகழ்வுகள் அதிகரித்துள்ளதாகக் கூறிய அவர், கண்டி, புத்தளம், குருநாகல் ஆகிய பகுதிகளிலிருந்து அதிகமான வன்முறை நிகழ்வுகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வன்முறை நிகழ்வுகளின் பெருமளவானவை எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான மைத்ரிபால சிறிசேனவுடைய ஆதரவாளர்களுக்கு எதிராகவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
தேர்தல் வன்முறை நிகழ்வுகள் தொடர்ப்பாக இதுவரை 25 சந்தேக நபர்களை கைதுசெய்து நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ளதாக காவல்துறை ஊடகத் தொடர்பாளர் அஜித் ரோகன குறிப்பிட்டார்.

ஆதாரம் : பிபிசி







All the contents on this site are copyrighted ©.