2014-12-12 15:41:09

வன்முறைவழி மதங்களிடையே பிரிவினைகளை ஊக்குவிக்க முடியாது


டிச.12,2014. நைஜீரியாவில் குண்டுகளை வெடிக்கச் செய்வதன் மூலம் மதங்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்த முயற்சிக்கும் வன்முறையாளர்கள் வெற்றியடையமாட்டார்கள் என்று அந்நாட்டுக் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவின் ஜோஸ் நகரில் உள்ள பேருந்து நிலையம் அருகேயும், அதனைத் தொடர்ந்து அதே பகுதியில் சந்தை நடைபெறும் இடத்திலும் இவ்வியாழன் மாலை குண்டு வெடித்ததில் அப்பாவி பொதுமக்கள் ஏறக்குறைய நாற்பது பேர் இறந்துள்ளனர்.
இவ்வன்முறை குறித்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அந்நாட்டின் ஜோஸ் மறைமாவட்ட ஆங்லிக்கன் பேராயர் Benjamin Kwashi அவர்கள், நைஜீரியாவில் ஏழை மக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்தக் குண்டு வெடிப்புத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட அனைவரும் ஏழைகள் மற்றும் நலிந்தவர்கள் என்றும் கூறிய பேராயர் Kwashi அவர்கள், இத்தாக்குதலை நடத்தியவர்கள் அந்நாட்டின் முஸ்லிம் சமூகத்தைக் குறித்து நிற்கவில்லை என்றும் கூறினார்.
மேலும், கடந்த மே மாதம் இதே பகுதியில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பில் 118 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : BBC







All the contents on this site are copyrighted ©.