2014-12-12 15:40:55

அருள்சகோதரிகள் மனித வர்த்தகர்களிடமிருந்து பெண்களை மீட்கின்றனர்


டிச.12,2014. இந்தியாவின் கொல்கத்தாவில் அருள்சகோதரிகள் குழு ஒன்று பெண்களை மனித வர்த்தகர்களிடமிருந்து மீட்டு வருவதாக கத்தோலிக்க ஊடகச் செய்திகள் கூறுகின்றன.
கொல்கத்தாவில் இரவு நேரங்களில், பொதுநிலையினர் ஆடைகளில் அருள்சகோதரிகள் மூன்று அல்லது நான்கு பேராகச் சேர்ந்து, பாலியல் தொழில் நடத்தும் விடுதிகளுக்குச் சென்று மனித வர்த்தகர்களிடமிருந்து பெண்களை விடுவித்து வருகின்றனர்.
இப்பணி குறித்து இவ்வாரத்தில் வத்திக்கான் பத்திரிகையாளர் கூட்டத்தில் விளக்கிய அமலமரி சகோதரிகள் சபையின் அருள்சகோதரி ஷார்மி டி சூசா அவர்கள், கடந்த நான்கு ஆண்டுகளில் முப்பது மனித வர்த்தகர்களைச் சிறைக்கு அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார்.
ஒரே இரவில் 37 சிறுமிகளைக் காப்பாற்றி இருப்பதாகவும், இவர்களில் 10 பேர் சிறுவயதினர் என்றும் விளக்கிய அருள்சகோதரி ஷார்மி அவர்கள், மீட்கப்படும் பெண்களுக்குப் பாதுகாப்பையும், மற்ற உதவிகளையும் தாங்கள் செய்து வருவதாகவும் கூறினார்.
இப்பணியை, அரசு-சாரா அமைப்புகளுடன் சேர்ந்து செய்வதாகவும் அச்சகோதரி மேலும் கூறினார்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.