2014-12-10 15:55:42

திருத்தந்தை பிரான்சிஸ் 48வது உலக அமைதி நாளுக்கென வழங்கியுள்ள செய்தி


டிச.10,2014. மனிதர்கள் அனைவருக்கும் அமைதியை வேண்டும் இவ்வேளையில், மனிதர்களால் உருவாகும் போர்களும் மோதல்களும் அகன்று, இயற்கையால் விளையும் அழிவுகளும், நோய்களும் தீரவேண்டும் என்று தான் இறைவனை மன்றாடுவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
2015ம் ஆண்டின் முதல் நாள், சனவரி முதல் தேதியன்று, கத்தோலிக்கத் திருஅவை சிறப்பிக்கவிருக்கும் 48வது உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று வெளியிட்டுள்ள சிறப்புச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"இனி ஒருபோதும் அடிமைகள் அல்ல, ஆனால், உடன்பிறப்புக்கள்" என்ற மையக்கருத்துடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள இச்செய்தியில், அடிமைத்தனத்தின் வரலாறு, அதன் இன்றைய நிலை, அதனை அறவே ஒழிக்கும் வழிகள் என்ற கருத்துக்களைப் பகிர்ந்துள்ளார்.
திருத்தூதர் பவுல், பிலமோனுக்கு எழுதியத் திருமுகத்தில், அடிமையாக இருந்த ஒனேசிமுக்காக பரிந்துரைத்த வார்த்தைகளான, "இனி அவனை நீர் அடிமையாக அல்ல, அடிமையைவிட மேலானவனாக, அதாவது உம்முடைய அன்பார்ந்த சகோதரனாக ஏற்றுக்கொள்ளும்" (பிலமோன் 15-16) என்ற சொற்கள் தனது அமைதி நாள் செய்திக்கு வித்திட்டன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மனித வரலாற்றில் அடிமைத்தனம் முன்னொரு காலத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழக்கமாக இருந்தாலும், இன்றைய காலத்தில் அது ஒரு குற்றம் என்ற உண்மை, உணர்வளவிலும், சட்டங்கள் வழியாகவும் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
அடிப்படை மனித மாண்பு மறுக்கப்படும்போது, அல்லது மறக்கப்படும்போது, மனிதர்கள் ஒரு பொருளாக கருதப்பட்டு, அடிமைகளாக விற்கப்படுகின்றனர் என்று எடுத்துரைத்தத் திருத்தந்தை, இத்தகைய மனநிலை உலகில் இருப்பதால், அடிமைத்தனம் இன்றைய காலத்திலும் தொடர்கிறது என்று கூறினார்.
பணத்திற்காக எதையும் செய்யத் துணியும் மனநிலையும், தவறான கொள்கைகளால் போரிலும், மோதல்களிலும் ஈடுபடும் அடிப்படைவாத உணர்வுகளும் அடிமைத்தனம் வளர்வதற்கு முக்கிய காரணங்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
தனி மனிதர்கள், அரசுகள், பன்னாட்டு நிறுவனங்கள் என்ற அனைத்து தளங்களிலும் அடிமைத்தனத்தை ஒழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று திருத்தந்தை விண்ணப்பித்துள்ளார்.
அடிமையாக வாழ்ந்து, பின்னர் தன் சுதந்திரத்தை அடைந்து, தன் வாழ்வை இறைவனின் பணியில் அர்ப்பணித்த புனித Josephine Bakhita அவர்கள், அடிமைத்தனத்தின் அனைத்து காயங்களும் மனிதர்கள் மத்தியிலிருந்து அகல்வதற்கு நம்பிக்கைதரும் அடையாளமாக விளங்குகிறார் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.