2014-12-10 15:56:21

திருத்தந்தை பிரான்சிஸ் - திருமணம் என்ற திருவருள் அடையாளம், கிறிஸ்தவக் குடும்பத்திற்குத் தரும் சக்தி


டிச.10,2014. திருமணம் என்ற திருவருள் அடையாளம் தரும் சக்தியைக் கொண்டு, கிறிஸ்தவக் குடும்பம், இறைவனின் அன்பை உலகில் பறைசாற்றும் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
அமெரிக்க ஐக்கிய நாட்டின், பிலடெல்பியா நகரில், 2015ம் ஆண்டு, செப்டம்பர் 22 முதல் 27 முடிய நடைபெறவிருக்கும் குடும்பங்களின் உலக மாநாட்டைக் குறித்து, குடும்பப்பணி திருப்பீட அவையின் தலைவரான பேராயர் Vincenzo Paglia அவர்களுக்கு, திருத்தந்தை அனுப்பியுள்ள மடலில் இவ்வாறு கூறியுள்ளார்.
"அன்பே நமது அறிவிப்புப்பணி: குடும்பம் இன்னும் வாழ்வுபெற" என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் இந்த உலக மாநாட்டிற்கு இறைவனின் ஆசீர் முழுமையாகக் கிடைப்பதை தான் நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாண்டு வத்திக்கானில் நடந்து முடிந்த ஆயர்கள் சிறப்பு மாமன்றம், கிறிஸ்தவக் குடும்பத்தை மையப்படுத்தி பல சவால்களை நம்முன் வைத்துள்ளது என்று கூறியத் திருத்தந்தை, இறைவார்த்தையை அடித்தளமாகக் கொண்டு கட்டப்படும் குடும்பங்கள், அனைத்துச் சவால்களையும் எதிர்கொள்ளும் என்று நம்பிக்கையை வெளியிட்டுள்ளார்.
மாநாட்டின் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள அனைவரையும், Guadalupe அன்னை மரியாவும், Aparecida அன்னை மரியாவும் வழிநடத்தும்படியாக வாழ்த்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் மடலை நிறைவு செய்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.