2014-12-10 15:31:20

அமைதி ஆர்வலர்கள் – 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருது


டிச.10,2014. டிசம்பர் 10 அனைத்துலக மனித உரிமைகள் தினம். இதே நாளில் அனைத்துலக விலங்குகள் உரிமைகள் தினமும் கடைப்பிடிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துலக மனித உரிமைகள் தினமான டிசம்பர் 10ம் தேதியன்று, ஒவ்வோர் ஆண்டும், நார்வே நாட்டின் ஆஸ்லோவில் நொபெல் அமைதி விருது வழங்கப்படுகிறது. இப்புதனன்றும் ஆஸ்லோ(Oslo)வின் நகர அரங்கில், 2014ம் ஆண்டின் நொபெல் அமைதி விருதை கைலாஷ் சத்யார்த்தி, மலாலா யூசாப்சாய் ஆகிய இரு மனித உரிமை ஆர்வலர்களும் பெற்றனர். அடிமைமுறை, பயங்கரவாதம், குழந்தைத் தொழில்முறை போன்றவற்றில் தங்கள் வாழ்வுக்குப் பெரும் அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் சிறாரைப் பாதுகாப்பதற்கும், உரிமைகள் பறிக்கப்பட்டு நசுக்கப்படும் சிறார் வாழ்வு உய்வடையவும், சிறார் கல்வி பெறவும் இவ்விருவரும் உழைத்து வருவதற்காக இவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. நொபெல் அமைதி விருதின் 14 இலட்சம் டாலர் நிதியை 60 வயது இந்தியரான சத்யார்த்தியும், 17 வயது பாகிஸ்தானியரான மலாலாவும் பகிர்ந்து கொள்கின்றனர். முதல் நொபெல் அமைதி விருது வழங்கப்பட்ட 1901ம் ஆண்டிலிருந்து 2014ம் ஆண்டுவரை இவ்விருதை 95 பேர் பெற்றுள்ளனர். இவர்களில், மலாலா யூசாப்சாய் உட்பட 16 பேர் பெண்கள். மேலும், இவ்விருதைப் பெறும் இளவயதினர் மலாலா. அதேசமயம், நொபெல் அமைதி விருதைப் பெற்றவர்களின் சராசரி வயது 62. இன்னும், மியான்மார் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சு ச்சி, Carl von Ossietzky, Liu Xiaobo ஆகிய மூவரும் கைதாகியிருந்தபோது இவ்விருதைப் பெற்றனர்.
நொபெல் விருதைப் பெறும் ஐந்தாவது இந்தியராகவும், நொபெல் அமைதி விருதைப் பெறும் இரண்டாவது இந்தியராகவும் (அன்னை தெரேசா 1979) பெருமை பெறும் சத்யார்த்தி அவர்கள் மலாலா அவர்களுடன் சேர்ந்து, ஆஸ்லோவில் பத்திரிகையாளர் கூட்டத்தில் பேசியபோது, "உலகில் ஒரு குழந்தை ஆபத்தில் இருந்தால்கூட முழு உலகமும் ஆபத்தில் உள்ளது என்று அர்த்தமாகும், குழந்தைப்பருவம் மறுக்கப்பட்ட இலட்சக்கணக்கான சிறார்க்கு இவ்விருது முக்கியமானது, சிறார்க்கு அமைதியான ஓர் உலகை உருவாக்க வேண்டும், அமைதிக்காக உழைக்கும் சிறாரையும் தயாரிக்க வேண்டும், நான் ஊடகங்களால் அதிகம் பேசப்படவில்லை என்பதில் வருத்தம் கிடையாது, ஏனெனில் அதிகமாக மறைவாகத் தெரியும் சிறாரோடு நான் பணி செய்கிறேன், எனது பணிகள் ஆண்டுகளாக மறைவாகவே இருந்தன" என்று கூறினார். மேலும், "மலாலா சிறந்த சிறுமி, எனது மகள் போன்று இருக்கும் இவர் அபாரத் துணிச்சல் கொண்டவர்" என்றும் அவர் கூறினார். மலாலா பேசியபோது, "இந்த விருதை ஏற்று, பதக்கத்தைப் பெற்று எங்கள் இல்லத்துக்குத் திரும்புவதற்காக நாங்கள் இங்கு இல்லை, ஆனால், சிறார் தங்களின் சொந்தக் காலில் நிமிர்ந்து நின்று தங்களின் உரிமைகளுக்காகப் பேச வேண்டும் என்பதை சிறார்க்குச் சொல்வதற்காக இங்கு இருக்கின்றோம் எனக் கூறினார். பாகிஸ்தானியச் சிறுமியாகிய மலாலா, சிறுமிகள் கல்வி பெறுவதற்குக் கொண்டிருக்கும் உரிமைகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் 2012ம் ஆண்டில் தலிபான்களால் சுடப்பட்டவர்.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் விதிஷா மாவட்டத்தில் 1954ம் ஆண்டு சனவரி 11ம் தேதி பிறந்த கைலாஷ் சத்யார்த்தி அவர்களின் இயற்பெயர் கைலாஷ் ஷர்மா. இவரின் தந்தை இவரின் சிறுவயதிலே இறந்துவிட்டார். சத்யார்த்தி, தனது 11வது வயதிலேயே, தன்னுடைய நண்பர் குழுவுடன், நூல்வங்கி ஒன்றைத் தொடங்கியுள்ளார். இவர், இளவயதில் பள்ளிக்குச் சென்றபோது, தன்னையொத்த வயதுடைய சிறுவன் ஒருவன் தன்னை ஏக்கத்துடன் உற்றுப் பார்த்ததை கவனித்தார். காலணிகள் தைப்பவரான அச்சிறுவனின் தந்தையிடம், அச்சிறுவன் ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை எனக் கேட்டபோது, நாங்கள் உழைக்கமட்டுமே பிறந்தவர்கள் என்று அவர் கூறிய பதில் தன்னை மிகவும் பாதித்ததாகவும், ஏழைக் குழந்தைகளுக்காக தான் உழைக்கத் தொடங்கியதில் அந்நிகழ்வின் பங்கு பெரிது என்றும் கூறினார் சத்யார்த்தி. இவர் தனது இளம்பருவத்தில் ஒரு நாள் விருந்தினர் சிலரை அழைத்திருத்தார். அவ்விருந்தில் பரிமாறப்பட்ட உணவைத் தயாரித்தது தாழ்த்தப்பட்ட இன மக்கள் என்று அறிந்ததால் விருந்தினர் உணவு உட்கொள்ளாமல் இடையிலேயே சென்று விட்டனர். இதனால் பாதிக்கப்பட்டு தன் குடும்பப் பெயரான ஷர்மா என்பதை எடுத்துவிட்டு சத்யார்த்தி என்பதை அதற்கு பதிலாக வைத்துக்கொண்டார். அன்றுமுதல் கைலாஷ் ஷர்மா, கைலாஷ் சத்யார்த்தியானார். புதுடெல்லியில் வாழ்ந்து வரும் இவர், ஒரு மகன், ஒரு மகள் என இரு குழந்தைகளுக்குத் தந்தையாவார்.
மின் பொறியியல் கல்வியில் பட்டமும், உயர் மின்னழுத்த பொறியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ள சத்யார்த்தி போபாலில் கல்லூரி ஒன்றில் சில ஆண்டுகள் பேராசிரியராகப் பணியாற்றினார். பின்னர் 1980ம் ஆண்டில் தனது பணியைவிட்டு விலகி, குழந்தைத் தொழில்முறைக்கு எதிரான பல்வேறு அமைதிப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். குழந்தைப்பருவத்தைக் காப்பாற்றும் இயக்கம்(Bachpan Bachao Andolan) என்ற அரசு-சாரா இயக்கத்தைத் தொடங்கினார். இதன்மூலம், இந்தியாவில் கடந்த முப்பது ஆண்டுகளில் எண்பதாயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் தொழிலாளர்களை மீட்டுள்ளார். கொத்தடிமைகளாக வேலைசெய்யும் சிறாரைக் கண்டுபிடித்து அவர்களை மீட்டு வருகிறார், மீட்பதோடு, அவர்களுக்குத் தொழில் பயிற்சி அளித்து பிற்கால வாழ்வுக்கும் உதவி வருகிறார். இவரின் முக்தி ஆசிரமம், பீஹார், ஒடிசா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இச்சிறாரின் மறுவாழ்வுக்கு உதவி வருகிறது. மேலும், சமூக ஊடகங்களுடன் சேர்ந்து தேசிய மற்றும் அனைத்துலக அளவில் சிறார் உரிமைகளுக்காக உழைக்கும் குழுக்களை உருவாக்கியுள்ளார்.
12 அரசு-சாரா நிறுவனங்களை உருவாக்கி, பல்வேறு கம்பளத் தொழிற்சாலைகளைத் திடீரெனச் சோதனை செய்து, கொத்தடிமைகளாகச் சிறாரை வைத்துள்ள முதலாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார் சத்யார்த்தி. கம்பளத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் கம்பளங்கள் வயதுவந்தவர்களால் தயாரிக்கப்பட்டவை என்பதை, உற்பத்திகளில் குறிக்கும் சுயச்சான்றிதழை இவர் முதன்முறையாக அறிமுகப்படுத்தினார். Rugmark என்ற இச்சான்றிதழ், தற்போது குட் வீவ் எனப்படுகிறது. இத்தகைய சான்றிதழ் கொண்ட கம்பளங்களையே வாங்க வேண்டுமென 1980களிலும் 1990களிலும் ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் சொற்பொழிவாற்றினார். சமூக அக்கறையுள்ள நுகர்வு மற்றும் வர்த்தக விழிப்புணர்வுக்காகப் போராடினார். இந்த இயக்கத்தின் தாக்கத்தாலும் வெற்றியாலும் உலகளவில் தயாரிப்பு மற்றும் விநியோகத் துறைகளில் தரம் உயர்ந்துள்ளது.
சிறார் தொழிலாளர்களுக்கெதிரான உலகளாவிய அணிவகுப்பில் (Global March Against Child Labor) பங்கேற்றார் சத்யார்த்தி. குழந்தைத் தொழிலாளர் மற்றும் கல்வி குறித்த பன்னாட்டு அமைப்புடனும்(ICCLE) இணைந்து பணியாற்றுகிறார் இவர்.
சத்யார்த்தி அவர்களின் சிறப்பான பணிகளைப் பாராட்டி, பல உள்நாட்டு மற்றும் பன்னாட்டு விருதுகளும் வழங்கப்பட்டுள்ளன. 2014ம் ஆண்டின் நொபெல் விருது உட்பட, 2009ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் சனநாயக பாதுகாவலர் விருது, 2008ல் இஸ்பெயினின் அல்போன்சா கொமின் அனைத்துலக விருது, 2007ல் இத்தாலியின் செனட் பதக்கம், 2007ல் அமெரிக்க ஐக்கிய நாட்டின் நவீன அடிமை முறை ஒழிக்கும் நாயகர் பட்டியலில் இடம்பெறல், 2006ல் அந்நாட்டின் விடுதலை விருது, 2002ல் மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் வால்லென்பெர்க் பதக்கம், 1999ல் ஜெர்மனியின் ஃப்ரெட்ரிக் எபெர்ட் ஸ்டிஃப்டங் விருது, 1998ல் நெதர்லாந்தின் தங்கக் கொடி விருது என பல விருதுகளும் பதக்கங்களும் இவருக்குக் கிடைத்துள்ளன. சத்யார்த்தி அவர்கள் கூறியுள்ளது போல, இந்தியாவில் 14 கோடி குழந்தைத் தொழிலாளரில் 5 கோடியே 50 இலட்சம் சிறார் கட்டாய வேலை செய்கின்றனர். ஒரு கோடிச் சிறார் தங்களின் முதலாளிகளிடம் கொத்தடிமைகளாக உள்ளனர். இவர்களுக்கு விடியல் தூரமில்லை என நம்புவோம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.