2014-12-08 12:58:14

புனிதரும் மனிதரே : செபத்தின் வல்லமையை உணர்த்தியவர்(St. Peregrine Laziosi


வட இத்தாலியில் திருத்தந்தை நாடுகளில் ஒன்றாக இருந்த ஃபோர்லி நகர மக்கள் இரு கட்சிகளாகப் பிரிந்து, திருத்தந்தை 4ம் மார்ட்டீன் அவர்களுக்கு எதிராகக் கடுமையாகக் கிளர்ச்சி செய்தனர். இதனால் ஃபோர்லி நகரத்துக்கு 1283ம் ஆண்டு தடை விதித்திருந்தார் திருத்தந்தை. அதோடு, இந்த ஃபோர்லி மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, பிலிப் பென்சியார் என்ற மரியின் ஊழியர் சபை தலைவரை, ஃபோர்லிக்கு அனுப்பினார் திருத்தந்தை. ஃபோர்லியில் பிலிப் பென்சியார் போதிக்க முயற்சித்தபோது, பெரகிரின் லாத்சியோசி என்ற 18 வயது இளைஞர் அவரைக் கன்னத்தில் அறைந்து கெட்ட வார்த்தைகளால் திட்டி அவரை ஊருக்கு வெளியே தள்ளிக்கொண்டு போனார். இத்தனை அவமானங்களிலும் பிலிப் பென்சியார் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. ஒரு கன்னத்தில அறைந்தபோது மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டினார். பிலிப் பென்சியாரின் இச்செயல்களால் உள்ளம் குத்துண்டவராய், அவரிடம் மன்னிப்புக் கேட்டார் இளைஞர் பெரகிரின். பிலிப் பென்சியாரும் அந்த இளைஞரைக் கனிவுடன் ஏற்றார். இந்தத் தருணம் பெரகிரின் மனதில் ஆழமான தாக்கத்தை உண்டு பண்ணியது. பின்னர் மிகவும் மனம் வருந்தி செபித்து நற்செயல்களில் ஈடுபட்டார் பெரகிரின். அரசியலில் முழுமையாய் ஈடுபட்டிருந்த பெரகிரின், சில ஆண்டுகள் கழித்து சியன்னா நகரில் மரியின் ஊழியர் சபையில் சேர்ந்தார். செபத்தால் பல நோயாளிகளைக் குணமாக்கினார். அப்பகுதியில் கோதுமை மற்றும் திராட்சை இரசமின்றி மக்கள் மிகவும் துன்புற்றபோது தனது செபத்தால் அக்குறையைப் போக்கினார். 60வது வயதில் வலது காலில் புற்றுநோய் வந்து அந்தக் காலை எடுத்துவிடுமாறு மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சை நடக்கவிருந்த நாளுக்கு முந்திய இரவு முழுவதும், அவ்வில்லச் சிற்றாலயத்தில் இருந்த சிலுவை முன்னால் செபித்தார் பெரகிரின். அப்போது இயேசு சிலுவையிலிருந்து இறங்கி வந்து அவரது வலது காலைத் தொடுவது போல் உணர்ந்தார் அவர். அடுத்த நாள் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கென வந்தபோது புற்றுநோயின் எந்த அறிகுறியும் காணப்படவில்லை. கடவுளிடம் ஆழமான நம்பிக்கை கொண்டு செபித்தால் நோய்கள் குணமாகும் என்பது இவரது வாழ்வு கற்றுத்தரும் பாடம். 1260ம் ஆண்டில் ஃபோர்லியில் அரசியல் செல்வாக்குமிக்க குடும்பத்தில் பிறந்த புனித பெரகிரின், தனது 85வது வயதில் 1345ம் ஆண்டு மே முதல் தேதி இறந்தார். புனித பெரகிரின், புற்றுநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள் மற்றும் பிற நோயாளிகளின் பாதுகாவலர். இவரை திருத்தந்தை 13ம் பெனடிக்ட் 1726ம் ஆண்டில் புனிதராக அறிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.