2014-12-08 15:28:44

பிலிப்பீன்சில் புயலால் பாதிக்கப்பட்டோரிடையே கத்தோலிக்க அமைப்புகள்


டிச.08,2014. பிலிப்பீன்ஸ் நாட்டில் 21 பேரை பலிவாங்கியுள்ள Hagupit புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அந்நாட்டின் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, அவசரகால உதவிகளை வழங்கி வருகிறது.
Hagupit புயலின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட குறைந்துள்ளபோதிலும், அதன் சீற்றம் பிலிப்பீன்சின் வேறுபகுதிகளையும் தாக்க உள்ளது எனக்கூறும் கத்தோலிக்க CAFOD அமைப்பு, புயலுக்கு முன்னரே பல ஆயிரக்கணக்கான மக்களை பாதுகாப்பான இடங்களில் குடியமர்த்துவதற்கு உதவியுள்ளது.
CAFOD அமைப்பின் கீழ் பணியாற்றும் பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பின் Jing Henderson அவர்கள் பேசுகையில், கடந்த ஆண்டின் Haiyan புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு புதுவாழ்வை அமைத்துக் கொடுத்ததுபோல், இந்த புயலால் பாதிக்கப்படும் மக்களுக்கும் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அனைத்து உதவிகளையும் ஆற்றும் என உரைத்தார்.
மக்களுக்கு சுத்தக் குடிநீர் கிடைப்பதற்கும், மருத்துவ உதவிகளுக்கும், தங்குமிடங்களுக்கும் என அனைத்து உதவிகளையும் தயாராக வைத்துள்ளன பிலிப்பீன்சின் கத்தோலிக்க உதவி நிறுவனங்கள்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.