2014-12-08 15:27:18

திருத்தந்தையின் பேட்டி : திருப்பீடத்திற்குள் மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுவது நலமானது


டிச.08,2014. திருப்பீடத்திற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது இயல்பான ஒன்றாக தனக்குத் தெரிவதாகவும், மாற்றுக் கருத்துக்கள் மறைத்து வைக்கப்படாமல், வெளியில் கொணரப்படுவது, நலமான ஒரு வழியே என்றும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
தன் தாய்நாடான அர்ஜென்டீனாவில் வெளியாகும் 'La Nacion' என்ற இதழுக்குப் பேட்டியளித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே விடயத்தைக் குறித்து மாற்றுக் கருத்துக்கள் வெளியிடப்படுவது நலமானது, மற்றும் வரவேற்கப்பட வேண்டியதே தவிர, அது தீயது என்று ஒதுக்கப்பட வேண்டியது அல்ல என்று கூறினார்.
திருஅவை அதிகாரிகள் சிலரால், சில சீர்திருத்தங்கள் அவ்வளவு எளிதாக வரவேற்கப்படுவதில்லை என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாறு பதில் அளித்தார்.
தனக்கும் அவ்வப்போது உடல் நலக் குறைவுகளும், வலிகளும் உள்ளன; தன் வயதோடு ஒப்பிடும்போது அவை இயல்பான ஒன்றே என்பதை தான் முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் தன் நேர்முகத்தில், வெளிப்படையாக, கருத்துக்களை வெளிப்படுத்தினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : EWTN








All the contents on this site are copyrighted ©.