2014-12-08 15:21:28

திருத்தந்தை : எதிர்பார்ப்பை நம்மில் எழுப்பும் நம்பிக்கையின் காலம், திருவருகைக் காலம்


டிச.08,2014. இயேசுவின் வரலாற்றுச் சிறப்புமிக்க வருகையையும், அவரின் இரண்டாம் வருகையையும் குறித்து, எதிர்பார்ப்பை நம்மில் எழுப்பும் நம்பிக்கையின் காலம், திருவருகைக் காலம் என்று கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.
பழைய ஏற்பாட்டின் மக்கள், இருளில் நடந்து, பின்னர் ஆறுதலை அடைந்த காலத்தைப் பற்றி இறைவாக்கினர் எசாயா அவர்கள், தன் நூலில் குறிப்பிட்டுள்ளதைப் பற்றி இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வருங்காலத்தை நம்பிக்கையுடன் நோக்க உதவும் விடுதலை மற்றும் மீட்பின் காலம் இது என்று குறிப்பிட்டார்.
நம்பிக்கையுடன் வருங்காலத்தை எதிர்நோக்கும் நாம், நம்மைச் சுற்றியிருப்பவர்களுக்கும் நம்பிக்கையை வழங்கும் விதமாக, அவர்களைத் துன்பங்களிலிருந்து மீட்கவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனே அனைத்துத் தீமைகளையும் அகற்றுவார் என்ற நம்பிக்கையை அவர்களுக்குத் தரவேண்டும் என்று கூறினார்.
நம்மை இறைவனிடம் ஒப்படைக்கும்போது, நம் பாவங்களை மறந்து, நமக்கு ஆறுதலை வழங்கும் இறைவன், அவரைச் சந்திப்பதற்கான பாதையை அவரே தயார் செய்து உதவுவார் என்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.