2014-12-08 15:35:28

தமிழகத்தில் குறையும் எச்.ஐ.வி. நோயாளிகள்


டிச.08,2014. தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், நாகாலாந்து ஆகிய ஆறு மாநிலங்களில், அதிகமாக இருந்த எச்.ஐ.வி. நோயாளிகளின் எண்ணிக்கை, 2011ம் ஆண்டு நிலவரப்படி குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வாண்டில், 1.16 இலட்சம் புதிய எச்.ஐ.வி., நோயாளிகளில், இந்த ஆறு மாநிலங்களின் பங்கு, 31 விழுக்காடு என்ற அளவிற்கே இருந்தவேளை, எச்.ஐ.வி., பாதிப்பு குறைவாக உள்ளதாக மதிப்பிடப்பட்ட, ஒடிசா, ஜார்க்கண்ட், பீகார், உத்தரபிரதேசம், மேற்குவங்கம், குஜராத், சத்தீஸ்கர், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரகண்ட் ஆகிய 10 மாநிலங்களில், 2012ம் ஆண்டு நிலவரப்படி, எச்.ஐ.வி., புதிய நோயாளிகளின் எண்ணிக்கை, 57 விழுக்காடாக உயர்ந்துள்ளது.
தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பும், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி, 2007 முதல் 2011 வரையுள்ள ஆண்டுகளில், தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில், எச்.ஐ.வி., பாதிப்பு குறைந்துள்ளது. இந்நோய் தாக்கம் குறைவாக இருந்த மாநிலங்களில், குறிப்பாக பஞ்சாபில், அது அதிகரித்துள்ளது.
எச்.ஐ.வி., நோயாளிகள் அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில், 21 லட்சம் பேருக்கு இந்த பாதிப்பு உள்ள நிலையில், 8 லட்சம் பேர் மட்டுமே நோய்க்குத் தேவையான மருத்துவம் பெற்று வருகின்றனர்.

ஆதாரம் : தினமலர்








All the contents on this site are copyrighted ©.