2014-12-08 15:33:53

கிறிஸ்தவக் கோவில்களைப் புதுப்பிப்பதற்கு, பங்களாதேஷ் அரசு 27,500 டாலர்கள் நிதி உதவி


டிச.08,2014. பங்களாதேஷ் நாட்டிலுள்ள 26 கிறிஸ்தவக் கோவில்களைப் புதுப்பிப்பதற்கும், கிறிஸ்தவர்களின் மேய்ப்புப் பணிகளுக்கும் என, 27,500 டாலர்கள் நிதி உதவியை வழங்கியுள்ளது, அந்நாட்டு சமயவிவகார அமைச்சகம்.
மக்கள் தொகையில், 0.4 விழுக்காட்டினரையே கிறிஸ்தவர்களாகக் கொண்ட பங்களாதேஷில், கிறிஸ்தவர்களின் மெய்ப்புப் பணிகளுக்கென அரசே உதவி வருவது, மதங்களிடையே நல்லுறவை வளர்க்க சிறந்த உந்துதல் என்று ஊடகங்கள் கருத்துத் தெரிவித்துள்ளன.
மதங்களிடையே இணக்க வாழ்வையும், உடன்பிறந்தோர் உணர்வையும் வளர்க்கும் நோக்கத்தில், இந்த நிதி உதவியை அரசு வழங்கி வருவதாக, பங்களாதேஷ் சமயவிவகார அமைச்சர், Motiur Rahman அவர்கள் கூறினார்.
ஒவ்வொரு மதத்தவரும் அவரவர் மத நம்பிக்கையையும், மத வழிபாடுகளையும் சரியான முறையில் கடைபிடித்தால்தான் அது நாட்டின் வளத்திற்கும் அமைதிக்கும் பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்று அமைச்சர் Rahman அவர்கள் மேலும் கூறினார்.
2009ம் ஆண்டிலிருந்து இதுவரை 91 கிறிஸ்தவக் கோவில்கள் புதுப்பிக்கப்படுவதற்கு 1,25,000 டாலர்களை, பங்களாதேஷ் அரசு கொடுத்து உதவியுள்ளது.

ஆதாரம் : AsiaNews








All the contents on this site are copyrighted ©.