2014-12-06 14:47:06

திருவருகைக்காலம் 2ம் ஞாயிறு ஞாயிறு சிந்தனை


RealAudioMP3 திருவருகைக் காலத்தின் இரண்டாம் ஞாயிறான இன்று, மாற்கு நற்செய்தியின் தொடக்கம், நமது வழிபாட்டின் மையக்கருத்தாகத் தரப்பட்டுள்ளது. கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற்கு 1:1) என்று இந்த நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ள அறிமுக வார்த்தைகள் நம் சிந்தனையைத் தூண்டுகின்றன.
கிறிஸ்தவ மறையின் உயிர்நாடியென விளங்கும் நான்கு நற்செய்திகளில், மாற்கு நற்செய்தியே முதலில் எழுதப்பட்டது. இந்த நற்செய்தியின் ஆரம்ப வரிகளில் மட்டுமே 'நற்செய்தி' என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. 'நற்செய்தி' என்ற வார்த்தையைச் சற்று ஆழமாகச் சிந்திக்க முயல்வோம். நல்ல, செய்தி என்ற இரு சொற்களின் இணைப்பே 'நற்செய்தி'.

இவ்விரு சொற்களில், 'செய்தி' என்ற சொல்லைக் கேட்டதும், நாளிதழ், அல்லது, தொலைக்காட்சியில் காண்பவற்றையே நாம் 'செய்தி' என்று கூறிவருகிறோம். நம் குடும்பங்களில் உறவுகளைச் சந்திக்கும்போது, அல்லது, தொலைபேசியில் தொடர்பு கொள்ளும்போது, 'என்ன செய்தி?' என்று நம் பரிமாற்றங்கள் அமைவதைக் காண்கிறோம். செய்தித்தாள், தொலைக்காட்சி, நம் குடும்பச் 'செய்தி' என்று நாம் திரட்டும் 'செய்தி'களைத் தொகுத்தால், நம்மிடையே அதிகமாக, மிக அதிகமாகப் பரிமாறப்படும் 'செய்திகள்', நல்ல செய்திகளா, அல்லது மோசமான செய்திகளா என்ற கேள்வி எழுகிறது.
நல்ல செய்திகளைப் புறந்தள்ளிவிட்டு, மோசமான செய்திகளை வெளியிடுவதில் ஊடகங்கள் மிகத் தீவிரமாகச் செயல்படுகின்றன. அத்தகையச் செய்திகளையே “மக்கள் விரும்புகிறார்கள்” என்றும் ஊடகங்கள் கூறி, தங்கள் தவறை மறைத்துவருகின்றன. எனவே, ஊடகங்களைத் திறந்ததும், நம் கண்களையும், காதுகளையும், சிந்தனையையும் நிறைப்பவை, ‘மோசமான செய்தி’களே!
ஊடகங்கள் வழியே, அலை, அலையாய் நம்மை வந்து தாக்கும் இந்த ‘மோசமான செய்தி’களில் ஊறிப்போய்விட்ட நாம், குடும்பங்களில் பரிமாறப்படும் செய்திகளிலும் இச்சாயலைக் காண்கிறோமோ என்ற ஐயம் எழுகின்றது. பல்வேறு ஊர்களில், பல்வேறு நாடுகளில் பிரிந்து வாழும் உறவுகளிடமிருந்து திடீரென ஒரு தொலைப்பேசி அழைப்பு வந்தால், அவர் ஏதோ ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லவே அழைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அந்த 'முக்கியம்' என்பது, பெரும்பாலும் ஒரு துன்பத்தை, நெருக்கடியை, தேவையைப் பகிர்ந்துகொள்ளும் செய்தியாக இருப்பதையே நாம் அனுபவத்தில் உணர்கிறோம்.
'செய்தி' என்ற சொல்லுக்குள், 'மோசமான செய்தி' என்ற பொருள் இத்தனை ஆழமாக ஊடுருவியுள்ள இவ்வேளையில், நற்செய்தியாளர் மாற்கு 'நல்ல செய்தி' அல்லது, 'நற்செய்தி' என்று சொல்வது, எத்தகைய எண்ணங்களை உள்ளத்தில் விதைக்கின்றது என்ற ஆய்வை மேற்கொள்வது நல்லது.

'இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை' என்பதைப் பறைசாற்ற ஒவ்வொரு நாளும், நல்லவை ஆயிரமாயிரம் நடக்கத்தான் செய்கின்றன. இருந்தாலும், நூற்றில் ஒன்றாக ஆங்காங்கே நடைபெறும் அக்கிரமங்களை, தேவைக்கதிகமாகப் பெரிதுபடுத்தி, உலகில் நடப்பதெல்லாமே மோசம் என்ற உணர்வை ஊடகங்கள் வளர்த்து, 'செய்தி'களை வியாபாரம் செய்துவருகின்றன. அவ்வப்போது, ஊடகங்களில் ‘நல்ல செய்தி’கள் வெளியாகின்றன. எனவே, மோசமானவையே பெரும்பாலும் நடைபெறும் இவ்வுலகில், நல்லவையும் எப்போதோ ஒருமுறை நடக்கத்தான் செய்கின்றன என்ற கருத்து நமக்குள் ஆழமாக வேரூன்றி விடுகிறது.
இந்தக் கருத்தை வேரறுக்க, நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், இந்த ஞாயிறன்று கடவுளின் மகனாகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தியின் தொடக்கம் (மாற்கு 1:1) என்ற வார்த்தைகளுடன் தன் நற்செய்தியை அறிமுகம் செய்கிறார். இது வெறும் நற்செய்தி அல்ல, 'இயேசு கிறிஸ்துவைப் பற்றிய நற்செய்தி'.

'நற்செய்தி' என்ற வார்த்தைக்கு, 'euangélion' என்ற கிரேக்கச் சொல்லை மாற்கு பயன்படுத்தியுள்ளார். இந்தச் சொல், 'நல்ல செய்தியைச் சொல்பவர்' என்ற பொருளையும் உள்ளடக்கியது. எனவே, மாற்கு 'நற்செய்தி' என்ற சொல்லால் குறிப்பிடுவது, ஒரு கருத்தை, அல்லது, ஏதோ ஒரு காலத்தில், எங்கோ ஓரிடத்தில் நிகழ்ந்த ஒரு வரலாற்றை அல்ல, அது ஒரு தலைசிறந்த மனிதரை, கடவுளின் தூதரைப் பற்றியது என்பதைச் சொல்கிறார். எனவே, நற்செய்தியாளர் மாற்கு அவர்கள், ஒரு ‘நற்செய்தி’யை அறிமுகம் செய்கிறார் என்பதைவிட, ‘நல்ல செய்தியாக வாழ்ந்த ஒருவரை’ அறிமுகம் செய்கிறார் என்று சொல்வதே பொருத்தமாகத் தெரிகிறது.

நல்ல செய்தியாக வாழ்ந்தவர் இயேசு. அவர் இவ்வுலகில் வாழ்ந்த காலத்திலும், நம்மைப் போலவே, தன்னைச் சுற்றிலும் ஒவ்வொரு நாளும் மோசமானச் செய்திகளைக் கேட்டும், பார்த்தும் வளர்ந்தவர். சிரியா, ஈராக், பாலஸ்தீனம் என்று நாம் இன்று பேச ஆரம்பித்தால், அங்கிருந்து நல்லது எதுவும் வராது என்ற அளவு, மோசமானவற்றையே கேட்டு நாம் அலுத்துப் போய்விட்டோம். நமக்கே இந்த நிலை என்றால், அங்கு வாழ்பவர்களை எண்ணிப் பார்க்கவேண்டும். அங்கு வாழ்பவர்கள் தங்கள் நம்பிக்கையை எல்லாம் இழந்து, நொறுங்கிப் போயுள்ளனர் என்று அப்பகுதியில் பணியாற்றும் திருஅவைத் தலைவர்கள் சொல்லிவருகின்றனர்.
இயேசு வாழ்ந்த காலத்திலும், பாலஸ்தீனம் உரோமைய ஆக்கிரமிப்பில் நொறுங்கிவந்த காலம். ஒவ்வொரு நாளும் அங்கு நிகழ்ந்த அக்கிரமங்களைக் கண்ட இயேசு, அச்செய்திகளின் பாரத்தால் நசுங்கிப்போகாமல், அச்செய்திகளுக்கு மாற்றாக, நம்பிக்கை தரும் செய்திகளை, தன் சொல்லாலும், செயலாலும் உருவாக்கினார் இயேசு.
நல்ல செய்திகளே நிரந்தரமானவை, ஏனைய மோசமான செய்திகள் நிரந்தரமற்றவை என்பதை மக்கள் மனதில் ஆழப்பதிக்க, தன் உயிரையேப் பணயம் வைத்து உழைத்தார். இறுதியில், தன் உயிரைப் பலியாகத் தந்து, இறந்து, உயிர்த்ததால், நல்ல செய்தி என்றும் வாழும் என்ற நம்பிக்கையைத் தந்தார் இயேசு.

இயேசு என்ற நற்செய்தி வாழ்ந்ததால் புண்ணியம் பெற்ற அந்தப் புனிதப் பூமியில், அவரைப் போலவே இன்றும், நல்ல செய்திகளை வாழ்ந்துவரும் பலர் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களில் ஒருவர், மருத்துவரான, Izzeldin Abuelaish அவர்கள்.
போர் என்ற பெயரால் வரைமுறையற்ற வன்முறையை வளர்த்துவரும் மனிதர்கள் நடுவில், "இவ்வுலகம் அவ்வளவு மோசமில்லை" என்ற நம்பிக்கையை வளர்ப்பவர்களில் ஒருவர், மருத்துவர் Izzeldin Abuelaish. அவர் எழுதிய “I Shall Not Hate: A Gaza Doctor’s Journey” அதாவது, "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்: காசாப் பகுதி மருத்துவரின் பயணம்" என்ற நூல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பூமியில் பயணம் மேற்கொண்ட வேளையில், அவருக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. அந்நூலில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள், நமக்குப் பல பாடங்களைச் சொல்லித் தருகின்றன.

முதலில், மருத்துவர் Abuelaish அவர்களைப் பற்றி ஒரு சில விவரங்கள்:
இஸ்ரேல் இராணுவமும், பாலஸ்தீன போராளிகளும் பல ஆண்டுகளாக மோதல்களில் ஈடுபட்டுவரும் காசாப் பகுதியில், Jabalia என்ற முகாமில் வளர்ந்தவர் Izzeldin Abuelaish. தன் மருத்துவப் படிப்பை முடித்தபின்னர், இஸ்ரேல் பகுதியில் மருத்துவராகப் பணியாற்றச் சென்ற முதல் பாலஸ்தீனியர் இவரே. இவ்விரு நாடுகளிடையே பாலங்களை உருவாக்க தான் செய்யும் சிறு முயற்சி அது என்று கூறினார். 2009ம் ஆண்டு, இஸ்ரேல் இராணுவம் காசாப் பகுதியில் மேற்கொண்ட தாக்குதலில், மருத்துவர் Abuelaish அவர்களின் இல்லம் தாக்கப்பட்டு, Bessan, Mayar, Aya என்ற அவரது மூன்று மகள்களும் கொல்லப்பட்டனர். இதற்குப் பின்னரும் சில ஆண்டுகள் அவர் இஸ்ரேல் பகுதிக்குச் சென்று மருத்துவப் பணிகள் ஆற்றிவந்தார். இன்றுவரை மருத்துவர் Abuelaish அவர்கள், இஸ்ரேல் இராணுவத்தையோ, ஏனையக் குழுக்களையோ தன் துன்பங்களுக்குக் காரணம் என்று குற்றம் சொல்லாமல் வாழ்ந்துவருகிறார்.

"மற்றவர்களைக் குற்றம் சொல்வதற்கு நாம் பயன்படுத்தும் சக்தியை, நல்லது செய்வதற்குப் பயன்படும் சக்தியாக மாற்றினால், நாம் முன்னேறுவதற்கு வாய்ப்புண்டு" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
ஏவுகணைத் தாக்குதலில் தன் இல்லத்தையும், மூன்று மகள்களையும் பறிகொடுத்த மருத்துவர் Abuelaish அவர்கள், தன் வேதனையை ஆக்கப்பூர்வமான வழிகளில் பயன்படுத்தினார். நம்மிடம் உள்ள பல்வேறு ஆயுதங்கள் அனைத்தையும்விட மிக வலிமையான ஆயுதம் கல்வியே என்று கூறும் மருத்துவர் Abuelaish அவர்கள், அந்தக் கல்வியை, மத்திய கிழக்குப் பகுதியில் வாழும் பெண்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு, தன் மகள்களின் நினைவாக, "Daughters for Life", அதாவது, "வாழ்வுக்காக மகள்கள்" அறக்கட்டளையை நடத்திவருகிறார். "இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்கும் முயற்சிகளுக்கு, என்னுடைய மூன்று மகள்களின் உயிர்கள், இறுதிப் பலிகளாக அமைந்தன என்பதை அறிந்தால், என் மனம் அமைதிபெறும்" என்று மருத்துவர் Abuelaish அவர்கள், "நான் வெறுப்பு கொள்ளமாட்டேன்" என்ற தன் நூலில் குறிப்பிட்டுள்ளார்.

பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகளுக்கிடையே நடப்பதெல்லாம் அழிவு மட்டுமே என்பதைச் செய்திகளாக வெளியிட்டுவரும் ஊடகங்களை நம்புவதைக் காட்டிலும், அப்பகுதிகளிலும் 'நற்செய்தி'களாக வாழ்பவர்கள் உள்ளனர் என்பதை, அங்கு வாழ்ந்த இயேசுவின் வழியே, மருத்துவர் Abuelaish போன்று, அங்கு தொடர்ந்து வாழும் நல்லவர்கள் வழியே அறிய முயல்வோம்.
இந்த நற்செய்திகளை பரப்புவதற்கு ஊடகங்கள் முன்வராது. இருப்பினும், நல்லவை இவ்வுலகில் நடக்கத்தான் செய்கின்றன என்ற நம்பிக்கையை வளர்ப்பது, நாம் ஆற்றக்கூடிய முதல் 'நற்செய்தி'ப்பணி. அமைதியின் இளவரசர் வருவதை எதிபார்த்துக் காத்திருக்கும் இந்தத் திருவருகைக் காலத்தில், அமைதியின் தூதர்களாக ஆயிரமாயிரம் உள்ளங்கள் நம்மைச் சுற்றி வாழ்கின்றனர் என்ற 'நற்செய்தி'யை, நம்மால் முடிந்தவரை இவ்வுலகில் பரப்ப முயற்சிகள் மேற்கொள்வோம்.

வாழ்வில் நாம் நல்லவை சிலவற்றை அனுபவிக்கும்போது, அதை மற்றவர்களுக்குச் சொல்வதில்லையா? நாம் படித்த ஒரு நல்ல நூல், நாம் சுவைத்த ஒரு நல்ல உணவு, நாம் பயன்பெற்ற ஒரு நல்ல மருந்து, அலல்து, நாம் கண்டு இரசித்த ஓர் இடம், ஒரு திரைப்படம்... என்று, நாம் பெற்ற இன்பத்தை மற்றவரும் பெறவேண்டும் என்ற முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோமே! நாம் பெற்ற நல்ல அனுபவத்தை மற்றவர்களும் பெறுவதற்கு பரிந்துரைக்கிறோம். அழைப்பு விடுக்கிறோம். அல்லது, குறைந்தபட்சம், நம் அனுபவத்தை ஒரு 'நல்ல செய்தி'யாக அவர்களுடன் பகிர்ந்துகொள்கிறோம்.
கிறிஸ்தவ மறையின் ஆணிவேராக விளங்கும் இயேசுவையும், அவர் வாழ்வையும் ஒரு 'நற்செய்தி'யாக நாம் மற்றவர்களுடன் பகிர்ந்துள்ளோமா? அந்த நற்செய்தியாக நாம் வாழ முற்படுகிறோமா? அல்லது, அந்த 'நற்செய்தி', எப்போதாவது ஒருநாள் தூசி துடைத்துப் புரட்டப்படும் ஒரு நூலாக, நம் வாழ்வில் தேடவேண்டிய ஓர் ஆன்மீக அகராதியாக மட்டும் நம் வாழ்வின் ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறதா?
விடைகள் தேடுவோம்! .... பயன்கள் பெறுவோம்!








All the contents on this site are copyrighted ©.