2014-12-06 16:25:04

திருத்தந்தை : கடும் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்துக்குச் சான்று பகரும் கிறிஸ்தவர்களுக்கு நன்றி


டிச.06,2014. கடும் துன்பங்களுக்கு மத்தியிலும் விசுவாசத்துக்குச் சான்று பகரும் ஈராக் மற்றும் மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவர்களுக்குத் தனது இதயம்நிறை நன்றியைத் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுக்கென அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, அந்நாட்டின் இஸ்லாம் தீவிரவாதிகளால் துன்புறும் பிற சிறுபான்மை மதத்தவரையும் நினைவுகூர்ந்துள்ளார்.
ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாதிகளின் துன்புறுத்தலால், ஈராக்கின் கிறிஸ்தவர்களும், யஜிதி இனத்தவரும் இன்னும் பிற சிறுபான்மை மதத்தவரும், கட்டாயமாக தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறுவதையும், அம்மக்கள் எதிர்கொள்ளும் கடும் துன்பங்களையும், கடவுளின் பெயரால் நடத்தப்படும் வன்முறைகளுக்கு எதிரான கண்டங்களைச் சமயத் தலைவர்கள் தெரிவிக்க வேண்டியதையும் தனது அண்மை துருக்கி நாட்டுத் திருத்தூதுப்பயணத்தின்போது குறிப்பிட்டதைச் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.
எந்தக் காற்றுக்கும், புயலுக்கும் வளைந்து கொடுத்து, ஆனால் முறியாத நாணல் போல, தானும், திருஅவையும் கடவுளின் கரத்தில் இருப்பதாக, புனித குழந்தை தெரேசா கூறியதை இந்நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன், நீங்களும் இந்த வேதனை நேரத்தில் நாணல் போன்று உள்ளீர்கள் என்று தனது செய்தியில் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கில் துன்புறும் கிறிஸ்தவர்களுடன் ஐரோப்பியத் திருஅவையின் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்து, அப்பகுதியில் இடம்பெறும் மனிதாபிமான உதவிகள் குறித்து ஆய்வு செய்வதற்கு, பிரான்ஸ் தலத்திருஅவையின் பிரதிநிதியாக, 48 மணி நேரச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள லியோன் கர்தினால் Philippe Barbarin அவர்கள் வழியாக இச்செய்தியை அனுப்பியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஈராக்கின் எர்பில் நகரில் இவ்வெள்ளியன்று சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ள கர்தினால் Barbarin அவர்களுடன், ஏறக்குறைய நூறு தன்னார்வப் பணியாளர்களும் சென்றுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.