2014-12-06 16:25:51

அமைதியை ஊக்குவிப்பதற்கு பல்சமயத் தலைவர்கள் உறுதி


டிச.06,2014. மதத்தைக் கேவலப்படுத்தும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும், இச்செயல்களில் முதலில் பாதிக்கப்படும் பெண்களைக் காப்பாற்றவும், அமைதியை ஊக்குவிக்கவும் முயற்சிகள் எடுப்பதற்குப் பல்சமயத் தலைவர்கள் உறுதி எடுத்துள்ளனர்.
திருப்பீட பல்சமய உரையாடல் அவை இவ்வாரத்தில் உரோமையில் நடத்திய மூன்று நாள் கூட்டத்தில் கலந்துகொண்ட கத்தோலிக்க, ஆங்லிக்கன், சுன்னி மற்றும் ஷியையட் இஸ்லாம் மதப் பிரதிநிதிகள் இவ்வாறு உறுதி எடுத்துள்ளனர்.
உலகில் அமைதியை ஏற்படுத்துவதில் பெண்கள் முக்கிய அங்கம் வகிக்கின்றனர் என்பதை ஏற்றுள்ள அதேவேளை, பல்சமய உரையாடலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க வேண்டுமெனவும் இப்பிரதிநிதிகள் பரிந்துரைத்தனர்.
இக்கூட்டம் குறித்துப் பேசிய, திருப்பீட பல்சமய உரையாடல் அவைத் தலைவர் கர்தினால் ஜான் லூயி தவ்ரான் அவர்கள், குடும்பம், பள்ளி, பல்கலைக்கழகம், ஆலயங்கள் போன்றவை குறித்த விழுமியங்களை இளைய தலைமுறைகளுக்குப் போதிக்க வேண்டும் என்ற தேவை அதிகமாக உணரப்பட்டது என்று கூறினார்.
இந்தக் கிறிஸ்தவ-முஸ்லிம் கூட்டம், அடுத்து ஈரானில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.