2014-12-06 16:25:44

OSCEன் உடனடிக் கவனம் பெறவேண்டியவை : சமய சுதந்திரம், உக்ரேய்ன் பிரச்சனை


டிச.06,2014. உலகளாவிய சமய சுதந்திரம், உக்ரேய்ன் நாட்டின் கிழக்குப் பகுதியில் இடம்பெறும் பிரச்சனைக்கு அமைதியான வழியில் தீர்வு போன்றவைகளுக்கு, ஐரோப்பாவின் முக்கிய பாதுகாப்பு நிறுவனம் உடனடியாக முன்னுரிமை கொடுத்துச் செயல்படுமாறு வலியுறுத்தினார் திருப்பீட உயர் அதிகாரி ஒருவர்.
சுவிட்சர்லாந்து நாட்டின் பேசில் நகரில் நடைபெற்ற, ஐரோப்பாவின் பாதுகாப்பு மற்றும் ஒத்துழைப்பு நிறுவனத்தின் OSCE 21வது அமைச்சரவைக் கூட்டத்தில் உரையாற்றிய, பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள் இவ்வாறு கூறினார்.
மக்களின் மத நம்பிக்கைக்கு எதிராக நடத்தப்படும் மிகக் கொடுமையான குற்றங்கள் கண்டிக்கப்பட வேண்டியவை மற்றும் அவைகள் எதிர்க்கப்பட வேண்டியவை என்றும் உரையாற்றிய பேராயர் மம்பெர்த்தி அவர்கள், ஒவ்வோர் ஆண்டும் உலகில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கொல்லப்படும் செயலுக்கு முன்னர் நாம் மௌனம் காக்கக் கூடாது என்றும் கூறினார்.
உலகிலும், ஐரோப்பாவிலும் இடம்பெறும் யூதமத விரோத போக்கு, முஸ்லிம்களுக்கு எதிரான சகிப்பற்றதன்மை, கிறிஸ்தவர்களுக்கு எதிராக வளர்ந்துவரும் பாகுபாடுகள் ஆகிய அனைத்தும் நிறுத்தப்படுமாறும் கேட்டுக்கொண்டார் பேராயர் மம்பெர்த்தி.
பேசில் நகரில் நடைபெற்ற மூன்று நாள் இக்கூட்டம் இவ்வெள்ளியன்று நிறைவடைந்தது.
திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலராகப் பணியாற்றிய பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்கள், வத்திக்கான் உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.