2014-12-05 16:32:30

நியூயார்க்கில் இடம்பெறும் போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுமாறு சமயத் தலைவர்கள் வேண்டுகோள்


டிச.05,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டில் இனவெறிப் பாகுபாடு ஒழிய வேண்டும் என்பதை வலியுறுத்தி, நியூயார்க் நகரில் நடைபெற்றுவரும் போராட்டங்கள் அமைதியான முறையில் இடம்பெறுமாறு அந்நகரின் சமயத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஒரு கறுப்பினத்தவரின் இறப்பிற்கு காரணமான காவல்துறை அதிகாரி ஒருவரை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து நியூயார்க் நகரில் கறுப்பின மக்கள் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்க சமூகங்கள் மற்றும் சிறாரின் நன்மைக்காவும், அமைதியை விரும்புகின்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகவும், இந்த எதிர்ப்புப் போராட்டங்கள் அமைதியான வழியில் நடைபெற வேண்டுமென்று சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.
நியுயார்க் கர்தினால் திமோத்தி டோலன், ப்ரூக்லின் ஆயர் நிக்கோலாஸ் தி மார்சியோ உட்பட பெரும்பாலானவர்கள் கத்தோலிக்கத் தலைவர்கள் இவ்வறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
அமெரிக்காவில், கடந்த ஜூலையில், Staten தீவில், வரி செலுத்தாமல் சில்லரையில் சிகரெட் விற்ற, Eric Garner என்ற கறுப்பினத்தவரை, காவல்துறை கைது செய்யச் சென்றது. ஆனால், அவர் கைவிலங்கு மாட்ட எதிர்ப்புத் தெரிவித்து, காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், ஒரு காவல்துறை அதிகாரி, தன் முஷ்டியை மடக்கி, முரட்டுத்தனமாக எரிக்கின் கழுத்தில் தாக்கினார். இதில், எரிக் மூச்சு திணறி இறந்தார். ஆனால், ஆஸ்துமா, இதயநோய் போன்றவற்றால் சிரமப்பட்டு வந்த எரிக்கின் மரணத்திற்கு, காவல்துறையின் முரட்டுத்தனமான பிடிதான் முக்கிய காரணம் எனக் கூறமுடியாது என்று தெரிவித்து, அது தொடர்பான அதிகாரியை வழக்கில் இருந்து விடுவித்தது நியூயார்க் நீதிமன்றம். இதனால் மக்கள் போராட்டங்களில் இறங்கியுள்ளனர்.
இப்போராட்டங்களை நடத்துவோரில் 223 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CNS







All the contents on this site are copyrighted ©.