2014-12-05 16:31:50

திருத்தந்தை : இறையியலாளர் தூய ஆவியாருக்குத் தாழ்மையுடன் செவிமடுக்க வேண்டும்


டிச.05,2014. திருஅவையில் பலவிதங்களில் வெளிப்படுத்தப்படும் விசுவாச வாழ்வு மூலமாக, தூய ஆவியார் திருஅவைக்குச் சொல்வதை இறையியலாளர் தாழ்மையுடன் உற்றுக் கேட்க வேண்டும் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
புதிய ஐந்தாண்டுப் பணியைத் தொடங்கியுள்ள அனைத்துலக இறையியல் பணிக்குழுவின் 38 உறுப்பினர்களை இவ்வெள்ளியன்று வத்திக்கானில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருஅவையின் கோட்பாடு சார்ந்த பிரச்சனைகளை, குறிப்பாக, தற்போதைய பிரச்சனைகளை புதிய கண்ணோட்டத்தில் ஆழமாக ஆராய வேண்டியது இந்தப் பணிக்குழுவின் பணியாகும், இதன்மூலம் திருஅவையின் அதிகாரப்பூர்வப் படிப்பனைகளுக்கு இக்குழு உதவ முடியும் என்றும் கூறினார்.
இப்பணிக்கு அறிவுத்திறமையோடு ஆன்மீக வாழ்வுமுறையும் அவசியம், இந்த ஆன்மீக வாழ்வுமுறையில் தூய ஆவியாருக்குச் செவிமடுத்தல் பற்றி, தான் இப்போது கவனம் செலுத்தவிருப்பதாகவும் கூறினார் திருத்தந்தை.
இந்த இறையியல் பணிக்குழுவில் பெண்களின் பங்கேற்பு குறிப்பிடத்தக்க வகையில் இருப்பதைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, பெண் இறையியலாளர்கள், தங்களின் பெண்மைப் பண்பைக் கொண்டு, கிறிஸ்துவின் ஆழங்காண முடியாத பேருண்மையின் கண்டுபிடிக்கப்படாத சில கூறுகளை எடுத்து ஆய்வு செய்யுமாறும் கேட்டுக்கொண்டார்.
இந்தப் பணிக்குழுவில் பன்னாட்டுப் பண்பு இருப்பதையும் குறிப்பிட்டுப் பேசி, இது, திருஅவையின் கத்தோலிக்கத்தைப் பிரதிபலிக்கின்றது என்று கூறினார் திருத்தந்தை.
இந்தப் பணிக்குழுவினர் தங்களின் பணிக்கு தூய கன்னிமரியின் எடுத்துக்காட்டைப் பின்பற்றுமாறும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.