2014-12-04 15:00:45

புனிதரும் மனிதரே : பொற்கொல்லர் புனிதர் (St. Eligius)


எலிஜியுஸ் என்ற ப்ரெஞ்ச் இளைஞர் சிறுவயதிலிருந்தே அசாதாரண திறமையை வெளிப்படுத்தி வந்தார். இதனை அறிந்த அவரின் பெற்றோர், அக்காலத்தில் பிரான்ஸ் நாட்டின் Limoges நகரில் நாணயங்கள் செய்வதில் தலைசிறந்தவராகத் திகழ்ந்த பொற்கொல்லர் அப்போ(Abbo)விடம் எலிஜியுசை அனுப்பினர். அப்போவிடம் தொழிலை நன்கு கற்ற எலிஜியுஸ், Neustria சென்று, அரசக் கருவூலத்தின் தலைவராகச் செயலாற்றிய பாபோ(Babo) என்பவரிடம் வேலையில் சேர்ந்தார். பாபோவின் பரிந்துரையின்பேரில் அரசர் 2ம் Clotaire அவர்கள், தனது அரியணையை, பொன்னாலும், விலையுயர்ந்த கற்களாலும் செய்யும் பொறுப்பை எலிஜியுஸிடம் ஒப்படைத்தார். எலிஜியுஸின் திறமை, நேர்மை ஆகியவற்றைக் கண்டு வியந்த அரசர், எலிஜியுசை மார்செய்ல்ஸ் நகரில் நாணயங்கள் செய்யும் நிறுவனத்தின் தலைவராக நியமித்தார். பாரிஸ் ஆயர் புனித ஜெர்மெய்ன் கல்லறையையும் எலிஜியுஸ் அழகுற அமைத்தார். கி.பி. 629ம் ஆண்டில் அரசர் Clotaire இறந்தார். அதன்பின்னர் ஆட்சிக்குவந்த அவரின் மூத்த மகன் முதலாம் Dagobert, எலிஜியுஸை தனது முதல் ஆலோசகராக நியமித்தார். அரசரைக் காணவரும் எவரும் முதலில் எலிஜியுசுக்கு மரியாதை செலுத்திவிட்டுத்தான் அரசரைப் பார்க்கச் சென்றார்கள். அந்த அளவுக்கு எலிஜியுஸ், அரசரின் நம்பிக்கைக்கு உரியவராய் இருந்தார். இந்த செல்வாக்கைப் பயன்படுத்தி ஏழைகளுக்கு உதவினார் எலிஜியுஸ். உரோமன், Gaul, Breton, Moor, குறிப்பாக, சாக்ஸன் இனங்களால் பிடிக்கப்பட்டு மார்செய்ல்ஸ் சந்தைக்கு விற்பனைக்குத் தினமும் வந்துகொண்டிருந்த அடிமைகளை மீட்பதற்கு இவர் உதவினார். அரசரின் ஆதரவுடன் நாடு முழுவதும் பல்வேறு ஆலயங்களையும், துறவு இல்லங்களையும் கட்டினார். கி.பி.639ம் ஆண்டில் அரசர் இறந்த பின்னர், அரசி Nanthild அரியணையில் அமர்ந்தார். இதன் பின்னர் எலிஜியுஸ் அரண்மனையைவிட்டு வெளியேறி குருத்துவப் பயிற்சி பெற்று 640ம் ஆண்டில் குருவானார். மக்களின் ஆதரவுடன் Noyon-Tournai மறைமாவட்ட ஆயராகி, இருபது ஆண்டுகள் கடுமையாக உழைத்து பலரைக் கிறிஸ்துவிடம் அழைத்து வந்தார் இவர். 590ம் ஆண்டில் பிரான்சில் பிறந்த புனித ஆயர் எலிஜியுஸ், 660ம் ஆண்டு டிசம்பர் முதல் தேதி காலமானார். எலுவா எனவும் அழைக்கப்படும் இப்புனிதரின் நினைவாக பாரிஸ் நோத்ரு தாம் பேராலயத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் 9ம் தேதி திருப்பலி நிறைவேற்றப்படுகிறது. புனித எலிஜியுஸ், பொற்கொல்லர்கள், நாணயம் சேகரிப்போர், கனிமத் தொழிலாளர்கள் போன்றோருக்குப் பாதுகாவலர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.