2014-12-03 16:09:58

திருத்தந்தை பிரான்சிஸ் - பல வழிகளில் நவீன அடிமைத்தனம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது


டிச.03,2014. இன்றைய உலகில் நிலவிவரும் அடிமைத்தனம், ஏற்றுக்கொள்ளக்கூடிய பழக்கங்களாக மாறி, மறைவில் நிகழும் அவலங்களாக உருவெடுத்துள்ளன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு உயர்மட்டக் குழுவை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவீன அடிமைத்தனத்தை ஒழிக்க மதங்கள் காட்டிவரும் அக்கறையைப் பாராட்டினார்.
அனைத்து மனிதரும் சம உரிமைகள் பெற்றவர்கள், அனைவரும் இறைவனின் உருவில் படைக்கப்பட்டவர்கள் என்பதை ஏற்றுக்கொள்ளும்போது, அவர்கள், சம உரிமையையும், இறைச் சாயலையும் இழக்கும் வண்ணம் நடத்தப்பட்டால், அது மனித குலத்திற்கு எதிரான குற்றம் என்று திருத்தந்தை தன் உரையில் வலியுறுத்தினார்.
சுற்றுலா பயணிகளின் கேளிக்கைகளுக்குப் பலியாகும் இளையோர் துவங்கி, உறுப்புக்கள் தானம், குழந்தைத் தொழில், போதைப்பொருள் பயன்பாடு என்று பல வழிகளில் நவீன அடிமைத்தனம் அளவுக்கதிகமாக வளர்ந்துள்ளது என்று திருத்தந்தை கவலை தெரிவித்தார்.
துன்புறும் அனைவரின் சார்பாகவும் அனைத்து மதங்களும் ஒருமித்த குரல் எழுப்பி, இந்த அடிமைத்தனத்தை உலகிலிருந்து நீக்க இன்று உறுதியான அறிக்கையை வெளியிடுகிறோம் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
அடிமைத்தனத்தின் பல்வேறு வடிவங்களை இவ்வுலகிலிருந்து அறவே ஒழிக்க நமது மத நம்பிக்கையும், ஆன்மீக விழுமியங்களும் உதவும் என்ற நம்பிக்கையோடு நாம் இங்கு கூடியிருக்கிறோம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கூடியிருந்த மதத் தலைவர்களிடம் கூறினார்.
இந்து, இஸ்லாம், யூதம், புத்தம் என்ற பல்வேறு மதங்களின் பிரதிநிதிகளுடன், கிறிஸ்தவ ஆர்த்தடாக்ஸ், ஆங்கிலிக்கன் சபை என்ற கிறிஸ்தவ பிரதிநிதிகளும் இணைந்து இச்செவ்வாயன்று வத்திக்கானில் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டுள்ளது, வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.