2014-11-30 14:52:06

புனித அந்திரேயா திருநாளன்று, புனித ஜார்ஜ் தலைமை ஆலயத்தில் நடைபெற்றத் திருவழிபாட்டில் திருத்தந்தை வழங்கிய உரை


நவ.30,2014. புனிதமிக்க என் அன்பு சகோதரரே,
புவெனோஸ் அயிரெஸ் (Buenos Aires) பேராயராக நான் இருந்தபோது, ஆர்த்தடாக்ஸ் சபையினரின் திருவழிபாடுகளில் அடிக்கடி கலந்துகொண்டேன். இன்று, புனித பேதுருவின் சகோதரரும், இயேசுவின் முதல் அழைப்பைப் பெற்றவரும், கிறிஸ்தவ ஒன்றிப்புத் திருஅவையின் பாதுகாவலருமான திருத்தூதர் புனித அந்திரேயா அவர்களின் திருநாளன்று, புனித ஜார்ஜ் தலைமை ஆலயத்தில், இந்தத் திருவழிபாட்டில் கலந்துகொள்ளும் பேறு பெற்றுள்ளேன்.
ஒருவரை ஒருவர் நேருக்கு நேர் சந்திப்பது, அமைதியின் அணைப்பைப் பரிமாறிக் கொள்வது, ஒருவருக்கொருவர் செபிப்பது ஆகிய அனைத்தும் நமக்குள் மீண்டும் நிலைநிறுத்தப்படும் முழுமையான ஒருங்கிணைப்பின் மிக்கிய அம்சங்கள். நமது ஒருங்கிணைப்புப் பயணத்தின் முக்கிய அம்சமான இறையியல் சார்ந்த உரையாடலுக்கு இவை அனைத்தும் முன்னேற்பாடாக உள்ளன. உண்மையான உரையாடல் என்பது, நமது கருத்துக்களின் சந்திப்பு அல்ல, மாறாக, ஒரு பெயர், ஒரு முகம், ஒரு வரலாறு கொண்ட தனி மனிதர்களின் சந்திப்பே உண்மையான உரையாடல்.
கிறிஸ்தவர்களாகிய நமக்கு இது இன்னும் சிறப்பு மிக்கது, ஏனெனில் இயேசு கிறிஸ்து என்ற ஒரு மனிதரே நாம் சந்திக்கும் உண்மை. "வந்து பாருங்கள்" என்று இயேசு கொடுத்த அழைப்பை ஏற்று, 'அவரோடு ஒருநாள் தங்கிய' (யோவான் 1,39) புனித அந்திரேயா அவர்களின் எடுத்துக்காட்டு, மாற்றங்களை உருவாக்கும் ஒரு சந்திப்பில் கிறிஸ்தவ வாழ்வு அடங்கியுள்ளது என்பதைக் காட்டுகிறது. தான் சந்தித்த கிறிஸ்துவை தன் சகோதரர் பேதுருவுக்கு அறிமுகம் செய்யும் அந்திரேயா அவர்கள், தனிப்பட்டச் சந்திப்பே உரையாடலின் அடிப்படை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்.
கத்தோலிக்கர்களுக்கும், ஆர்த்தடாக்ஸ் சபையினருக்கும் இடையே அமைதியும், ஒப்புரவும் உருவாக, கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை அத்தனகோரஸ் அவர்களும், திருத்தந்தை 6ம் பால் அவர்களும் எருசலேமில் சந்தித்தனர். அச்சந்திப்பின் 50ம் ஆண்டை நினைவுகூர, ஆண்டவர் இயேசு இறந்து, உயிர்த்த எருசலேம் நகரில் நாம் சந்தித்தோம்.
கிறிஸ்தவ ஒன்றிப்பை வலியுறுத்த, 2ம் வத்திக்கான் சங்கம் உருவாக்கிய ‘Unitatis Redintegratio’ என்ற ஏடு வெளியிடப்பட்ட 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய ஒரு சில நாட்களில் நான் இங்கு வந்திருப்பது, ஒரு மகிழ்வான நிகழ்வு.
ஆர்த்தடாக்ஸ் சபைகளுடன் ஒருங்கிணைப்பை உருவாக்குவது ஒன்றையே, கத்தோலிக்கத் திருஅவை விரும்புகிறது; உரோமைய ஆயர் என்ற முறையில், நானும் விரும்புகிறேன். இந்த ஒருங்கிணைப்பு உருவாக, நாம் ஒன்றிணைந்து அறிக்கையிடும் நம்பிக்கைக் கோட்பாடுகளைத் தவிர, கத்தோலிக்கத் திருஅவை வேறு எதையும் கேட்கவில்லை என்பதை, இங்கு கூடியிருக்கும் அனைவருக்கும் நான் கூற விழைகிறேன்.
ஆண்டவராகிய கிறிஸ்துவின் சீடர்கள் என்ற முறையில் நாம் வாழவேண்டும் என்ற குரல்கள் இன்றைய உலகிலிருந்து எழுகின்றன.
இந்தக் குரல்களில் முதன்மையானது வறியோரின் குரல். கொடுமையான உணவு பற்றாக்குறை, வளர்ந்துவரும் வேலையில்லாத் திண்டாட்டம், பெருகிவரும் சமுதாயப் புறக்கணிப்பு போன்ற அவலங்களால் மனிதர்கள் துன்புறுகின்றனர். இந்த அவலங்கள், தீவிரவாதிகளையும், குற்றவாளிகளையும் உருவாக்குகின்றன. இத்தகையச் சூழலில் குரல் எழுப்பும் சகோதர, சகோதரிகளைக் கண்டு நாம் அக்கறையின்றி இருக்க முடியாது. அவர்கள் நம்மிடம் பொருளாதார உதவிகள் மட்டும் கேட்பதில்லை, அவற்றைவிட முக்கியமாக, அவர்களின் மதிப்பை நிலைநாட்டும் முயற்சிகளை நாம் மேற்கொள்ளவேண்டும் என்று குரல் எழுப்புகின்றனர். அக்கறையின்மை என்ற போக்கு உலகமயமாகி வருவதை முற்றிலும் நீக்கி, அன்பும், உறுதுணையும் கொண்ட கலாச்சாரத்தை வளர்க்க கிறிஸ்தவர்களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.
உலகின் பல பகுதிகளில் நிகழ்ந்துவரும் மோதல்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எழுப்பும் குரல் இரண்டாவதாகக் கேட்கிறது. நீங்கள் வாழும் இப்பகுதியைச் சுற்றியுள்ள நாடுகளில் இக்குரல் ஓங்கி ஒலிக்கிறது. ஒப்புரவு, ஒருங்கிணைப்பு அடங்கிய பாதையில் நாம் துரிதமாக பயணிக்க கத்தோலிக்கர்களையும், ஆர்த்தடாக்ஸ் சபையினரையும், பாதிக்கப்பட்டோரின் குரல்கள் அழைக்கின்றன.
இளையோரிடமிருந்து எழும் மூன்றாவது குரல் நமக்குச் சவாலாக அமைகிறது. நம்பிக்கையற்றச் சூழலைக் காணும் இளையோர் மனம் தளர்ந்து வாழ்கின்றனர். தங்கள் மகிழ்வு, பொருள்களைத் திரட்டுவதில் அடங்கியுள்ளதாக எண்ணுகின்றனர். நற்செய்தியின் மதிப்பீடுகளை அவர்கள் மனங்களில் பதிக்காமல் போனால், அவர்கள் உண்மையான ஞானத்தை இழந்துவிடுவர். கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் ஒற்றுமையை இளையோரே மிக அதிகம் விரும்புகின்றனர், வருந்திக் கேட்கின்றனர். கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ், ஏனைய கிறிஸ்தவ சபை ஆகியவற்றைச் சேர்ந்த இளையோர், Taize போன்ற குழுமங்களில் கூடிவருவதைக் காண்கிறோம். தங்களிடம் உள்ள வேற்றுமைகளை அல்ல, மாறாக, தங்களிடம் உள்ள ஒற்றுமைகளை வலியுறுத்தவே இவர்கள் இவ்வாறு இணைந்து வருகின்றனர்.
புனிதமிக்கவரே, நமது முழுமையான ஒருங்கிணைப்பை நாம் பெருமளவு உணர்ந்து வருகிறோம். இந்த உணர்வு நாம் மேற்கொள்ளவேண்டிய மீதிப் பயணத்திற்கு வலிமையைத் தருகிறது. திருத்தூதரான அந்திரேயாவும் அவரது சகோதரர் பேதுருவும் நமது பயணத்திற்கு துணையாக இருப்பர். முழுமையான ஒருங்கிணைப்பு என்ற கொடையை இறைவன் வழங்க, நாம் ஒருவர் ஒருவருக்காகச் செபிப்போம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.