2014-11-30 14:58:46

துருக்கித் திருத்தூதுப் பயணம் – 3வது நாள் நிறைவு நிகழ்வுகள்


நவ.30,2014. இஞ்ஞாயிறு துருக்கி நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இன்று காலை 7.30 மணிக்கு, இஸ்தான்புல் நகரின் பாப்பிறைப் பிரதிநிதி இல்லத்தில் திருப்பலி நிறைவேற்றினார் திருத்தந்தை. அவ்வில்லத்தில் துருக்கி யூதமத ரபி Isak Haleva அவர்களையும் சந்தித்தார். தற்போது துருக்கியில் 17 ஆயிரம் யூதர்கள் வாழ்கின்றனர். இச்சந்திப்பை முடித்து, அங்கிருந்து ஐந்து கிலோ மீட்டர் தூரத்திலுள்ள Phanar கான்ஸ்டான்டிநோபிள் கிறிஸ்தவ ஒன்றிப்பு முதுபெரும் தந்தை மாளிகை சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்கு அத்திருஅவையின் புனித ஜார்ஜ் ஆலயத்தில் நடைபெற்ற வழிபாட்டில் கலந்துகொண்டார். ஏறக்குறைய மூன்று மணி நேரம் இடம்பெற்ற இவ்வழிபாட்டை தலைமையேற்று நடத்திய முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்கள் முதலில் மறையுரையாற்றினார். பின்னர் திருத்தந்தையும் உரையாற்றினார்.
இவ்வழிபாட்டில் திருத்தந்தைக்காகச் சிறப்பான செபங்களும் சொல்லப்பட்டன. இவ்வழிபாடு முடிந்து அம்மாளிகையின் 2வது மாடிக்குத் திருத்தந்தையும், முதுபெரும் தந்தையும் சென்றனர். அங்கு பால்கனியில் இருவரும் நின்று, கீழே கூடியிருந்த மக்களுக்கு ஆசீர் வழங்கினர். முதலில் திருத்தந்தை இலத்தீனிலும், பின்னர் முதுபெரும் தந்தை கிரேக்கத்திலும் ஆசீர் வழங்கினர். முதுபெரும் தந்தை ஆசீர் வழங்கியபோது, திருத்தந்தை தனது நெற்றியில் சிலுவை வரைந்து ஆசீரைப் பெற்றார். அதன்பின்னர் இருவரும் ஆரத்தழுவினர். பின்னர் திருத்தந்தையின் கையைப் பிடித்து அழைத்துச் சென்றார் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ. இவ்விருவரும் இணைந்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டனர். மொசைக் வேலைப்பாடுகள் நிறைந்த கிறிஸ்துவின் திருவுருவப் படம் ஒன்றைப் பரிசாக அளித்தார் திருத்தந்தை. வத்திக்கான் பசிலிக்காவில் பாப்பிறை திருப்பலி பீடத்துக்குக்கீழ் புனித பால்யங்கள் வைக்கப்பட்டுள்ள பெட்டியில் வரையப்பட்டுள்ள கிறிஸ்துவின் திருவுருவப் படம் இது. இது 9ம் நூற்றாண்டைச் சார்ந்தது. இதில், கிறிஸ்து நற்செய்தியை கையில் வைத்திருப்பது போலவும், ஆசீர்வதிப்பது போலவும் உள்ளது.
முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் மதிய உணவும் அருந்தினார் திருத்தந்தை பிரான்சிஸ். அம்மாளிகையின் தங்கப் புத்தகத்தில் கையெழுத்திட்ட திருத்தந்தை....
“எனது முன்னோர்களின் வழிநின்று, திருத்தூதர் அந்திரேயாவின் தலைமைப்பீடத்துக்குத் திருப்பயணியாக வந்துள்ளேன். எனது அன்புமிகு சகோதரர் முதுபெரும் தந்தை முதலாம் பர்த்தலோமேயோ அவர்களுடன் சேர்ந்து, கிறிஸ்துவால் மிகவும் விரும்பப்பட்ட திருஅவையின் ஒன்றிப்புக் கொடையையும், அனைத்துக் கிறிஸ்தவர்கள் மத்தியில் இணக்கத்தையும் நாடுகளுக்கு அமைதியையும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்” என்று கையெழுத்திட்டார்.
அம்மாளிகையிலிருந்து பாப்பிறைப் பிரதிநிதி இல்லம் சென்ற திருத்தந்தை, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான இளையோரை இவ்வில்லத்தின் தோட்டத்தில் சந்தித்தார். அதன் பின்னர் அனைவருக்கும் நன்றிகூறி இஸ்தான்புல், அத்தாத்துர்க் விமான நிலையம் சென்று உரோமைக்குப் புறப்பட்டார். இத்துடன் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. ஏழைகளும், போர்களினால் பாதிக்கப்பட்டவர்களும், இளையோரும் ஆர்த்தடாக்ஸ் திருஅவையுடன் முழு ஒன்றிப்புக்கு அழைப்பு விடுக்கின்றனர். உலகின் அமைதிக்கு சமய சுதந்திரம் இன்றியமையாதது. மதத்தின் பெயரால் போர்கள் வேண்டாம் என்ற வேண்டுகோளுடன் துருக்கித் திருத்தூதுப் பயணம் நிறைவடைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.