2014-11-30 14:57:54

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், முதுபெரும் தந்தை பர்த்தலோமேயு அவர்களும் இணைந்து வெளியிட்டுள்ள பொது அறிக்கை


நவ.30,2014. இயேசுவால் முதலில் அழைக்கப்பட்ட சீடரும், தூய பேதுருவின் சகோதருமான புனித அந்திரேயாவின் திருவிழாவன்று நாங்கள் இருவரும் சந்திக்கும் இந்தக் கொடைக்காக இறைவனுக்கு நன்றி கூறுகிறோம். எங்கள் முன்னோடிகளான திருத்தந்தை 6ம் பால் அவர்களும், முதுபெரும் தந்தை அத்தனகோரஸ் அவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையின் நினைவாக, இவ்வாண்டு மேமாதம் எருசலேமில் நாங்கள் சந்தித்தபோது, ஓர் அறிக்கையை வெளியிட்டோம். எங்கள் சகோதரத்துவ சந்திப்பின் தொடர்ச்சியாக, எங்கள் பொது அக்கறைகளையும், நோக்கங்களையும் இந்த அறிக்கை வழியே மீண்டும் வலியுறுத்த விழைகிறோம்.
இறைவிருப்பத்திற்குக் கீழ்படிந்தவர்களாய், கிறிஸ்தவர்களிடையே, குறிப்பாக, கத்தோலிக்கருக்கும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களுக்கும் இடையே முழு ஒன்றிப்பை ஊக்குவிக்க முயற்சிகளைத் தீவிரமாக்கும் உறுதியை வெளியிடுகிறோம். 35 ஆண்டுகளுக்கு முன்னர், திருத்தந்தை இரண்டாம் பால் அவர்களும், கிறிஸ்தவ ஒன்றிப்பின் முதுபெரும் தந்தை, Dimitrios அவர்களும் இணைந்து உருவாக்கிய அனைத்துலகக் கூட்டு அவையின் இறையியல் கலந்துரையாடல்களை, தொடர்ந்து ஆதரிக்க உள்ளோம். இந்த உரையாடலுக்கு எங்கள் செப உறுதியை வழங்குவதுடன், இவ்விரு கிறிஸ்தவ சபைகளின் விசுவாசிகளும் செபிக்கவேண்டும் என்று விண்ணப்பிக்கிறோம்.
சிரியா, ஈராக் மற்றும் மத்தியக் கிழக்குப் பகுதி முழுவதிலும் நிலவும் இன்றைய நிலைகள் குறித்து எங்கள் ஒன்றிணைந்த கவலையை வெளியிடுகிறோம். அமைதி, மற்றும் நிலையானச் சூழலை உருவாக்கும் விருப்பம், ஒப்புரவு மற்றும் உரையாடல் வழியே, மோதல்களுக்குத் தீர்வு காண்பது குறித்த ஆர்வம் ஆகியவற்றில் நாங்கள் இணைந்துள்ளோம். சமூகப் பொறுப்பில் உள்ளோர், தங்கள் அர்ப்பணத்தை ஆழப்படுத்தட்டும். மக்கள், குறிப்பாக, கிறிஸ்தவர்கள் தங்கள் சொந்த நாட்டில் இருக்க, தீர்வுகள் வழங்கட்டும். கிறிஸ்தவர்கள் இல்லாத மத்தியக் கிழக்குப் பகுதியை எண்ணிப்பார்ப்பது கடினம். கிறிஸ்தவர்கள் இங்கு பல கொடுமைகளை அனுபவிக்கின்றனர். மனித வாழ்வுக்குரிய மதிப்பு இழக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பலர் அக்கறையின்றி இருப்பதால், இத்தகைய நிலை தொடர்கின்றது.
“ஓர் உறுப்பு துன்புற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து துன்புறும். ஓர் உறுப்பு பெருமை பெற்றால் அதனுடன் மற்ற எல்லா உறுப்புகளும் சேர்ந்து மகிழ்ச்சியுறும்” (1 கொரிந்தியர் 12:26) என்று புனித பவுல் அடியார் கூறுவதுபோல், துன்புறுதலில் ஒன்றிப்பு என்ற உண்மை உள்ளது. துன்புறுதலில் பங்குபெறுவது, ஒன்றிப்பை உருவாக்கும் கருவியாக மாறும். மத்தியக் கிழக்குப் பகுதியின் துன்பங்களும், கிறிஸ்தவர்களின் நிலையும் நம் தொடர்ந்த செபங்களுக்கு மட்டுமல்ல, அனைத்துலகச் சமூகத்தின் சரியான பதிலிறுப்புக்கும் அழைப்பு விடுக்கின்றன.
இன்றைய உலகு எதிர்நோக்கும் சவால்களுக்கு பதிலுரைக்க, அனைத்து நல்மனம் கொண்ட மக்களின் ஒருமைப்பாடு தேவைப்படுகிறது. அதேவேளை, ஒருவர் மீது ஒருவர் காட்டும் மதிப்பு, மற்றும் நட்புணர்வோடு, இஸ்லாமியர்களுடன், பலன்தரும் உரையாடல்களை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்கின்றோம்.
இஸ்லாம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் இடையே காணப்படும் பொது மதிப்பீடுகளால் தூண்டப்பட்டு, இவ்விரு மதங்களும் அமைதி, நீதி, மனித மாண்பு, மனித உரிமை ஆகியவற்றிற்காக உழைக்குமாறு அழைப்புப் பெற்றுள்ளனர். முன்னொரு காலத்தில் ஒன்றிணைத்து வாழ்ந்த இவ்விரு மதங்களின் மக்களும் இப்பகுதியில் இன்று போரின் விளைவுகளால் துன்பங்களை அனுபவிக்கின்றனர். அமைதி, மற்றும் ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தைக் கட்டியெழுப்ப உதவும் வகையில், மதங்களிடையே உரையாடல்கள் ஊக்குவிக்கப்பட அழைப்புவிடுக்கிறோம். அதே நேரத்தில், உக்ரைன் நாட்டின் அமைதிக்காகவும் செபிக்கிறோம்.
உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இறை அன்புக்கு, சோர்வற்ற சாட்சிகளாகச் செயல்படுவார்களாக. மனிதகுலமனைத்திற்கும் ஒன்றிப்பு மற்றும் அன்பின் வழியே கிடைக்கும் அமைதி என்ற கொடையை, இறைவன் அருள வேண்டும் என்று நாங்கள் இருவரும் இணைந்து செபிக்கிறோம்.
“அமைதியை அருளும் ஆண்டவர்தாமே எப்பொழுதும் எல்லா வகையிலும் உங்களுக்கு அமைதி அளிப்பாராக! ஆண்டவர் உங்கள் அனைவரோடும் இருப்பாராக!” (2 தெசலோனிக்கர் 3:16)

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.