2014-11-29 15:55:09

திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணம் – முதல் நாள் மாலை நிகழ்வுகள்


நவ.29,2014. மதத்தின் பெயரால் இடம்பெறும் அனைத்து வன்முறைகளும் நிறுத்தப்பட வேண்டும், மனித மாண்பு மற்றும் மனித உரிமைகளுக்கு எதிரான எல்லாவிதமான வன்முறைகளையும் எதிர்ப்பதற்கு சமயத் தலைவர்கள் கடமைப்பட்டுள்ளார்கள், இவற்றுக்கு எதிராக, சமயத் தலைவர்கள் தங்கள் கண்டனங்களைத் தெரிவிக்கும்போது, மதத்தவர் மத்தியில் வேறுபாடுகள் இருந்தாலும், மதத்தவர்க்கிடையே நட்புறவும், ஒருவர் ஒருவரையொருவர் மதிப்பதும் இயலக்கூடியதே என்ற தெளிவான செய்தியை தங்களின் சமூகங்களுக்கு அனுப்ப வேண்டும், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி நிலவ வேண்டும், துருக்கியில் தஞ்சம் அடைந்திருக்கும் ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் புலம்பெயர்ந்த மக்களுக்கு, அனைத்துலக அளவில் உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற முக்கிய அறைகூவலுடன் துருக்கி நாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் முதல் நாள் நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
நவம்பர் 28, இவ்வெள்ளி இந்திய நேரம் மாலை 4.30 மணிக்குத் துருக்கி தலைநகர் அங்காரா சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், துருக்கி அரசுத்தலைவர் எர்டோகான், பிரதமர் அகமது ஆகியோரைச் சந்தித்த பின்னர், அந்நாட்டின் தேசத்தந்தை அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்டு, வெள்ளை மற்றும் சிவப்பு நிற ரோஜா மலர் வளையம் ஒன்றை அக்கல்லறையில் வைத்து அந்நாட்டுக்காகச் செபித்தார். அன்று உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, துருக்கியின் சமய விவகாரத் துறையான Diyanet İşleri Başkanlığı சென்று அதன் தலைவர் பேராசிரியர் Mehmet Gormez அவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை. அவ்விடத்தின் இரண்டாவது மாடியிலுள்ள நூலக அறையில், துருக்கியின் முஸ்லிம் சமூகத்தின் உயர்மட்ட அதிகாரிகள், திருத்தந்தையுடன் சென்ற முக்கிய அதிகாரிகள் ஆகியோரின் இருப்பில் இச்சந்திப்பு நடந்தது. இந்நிகழ்வில் முதலில் வரவேற்புரை வழங்கினார் Gormez.
உலகில் நிலவும் ஏழ்மை, பசி, சண்டை, சுற்றுச்சூழல் சீர்கேடு, அனைத்துவிதமான தீவிரவாதச் செயல்கள் ஆகிய எல்லாப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் மதங்களின் தலைவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டிய பொறுப்பைக் கொண்டிருக்கின்றனர். அல்லாவின் பெயரால் வன்முறையைக் கட்டவிழ்த்து விடுபவர்கள், இஸ்லாம் மதத்தின் அமைதியான பாதையை “முழுமையாக மீறுகின்றனர்” என்று Gormez அவர்கள் உரையாற்றினார். இவ்வுரைக்குப் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பல்சமய உரையாடல், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுதல் மற்றும் நட்புறவில் சமயத் தலைவர்களின் பொறுப்புணர்வு பற்றி உரையாற்றினார்.
துருக்கியிலுள்ள 98 விழுக்காட்டு முஸ்லிம்களில் 68 விழுக்காட்டினர் சுன்னி இஸ்லாம் பிரிவையும், 30 விழுக்காட்டினர் ஷியையட் இஸ்லாம் பிரிவையும் சார்ந்தவர்கள். இருந்தபோதிலும் துருக்கி நாடு சமயச் சார்பற்ற ஒரு நாடு. இஸ்லாமிய அரசியல்-சமய தலைமைத்துவத்தைக் குறிக்கும் caliphate அமைப்புமுறையை 1924ம் ஆண்டில் இரத்து செய்து சமயச் சார்பற்ற துருக்கியை அறிவித்தார் அந்நாட்டுத் தேசத்தந்தை அத்தாத்துர்க். caliphate அமைப்புமுறை நீக்கப்பட்ட பின்னர், 1924ம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக உருவாக்கப்பட்டது Diyanet. இஸ்லாம் மதத்தின் நம்பிக்கைகள், வழிபாடு, அறநெறிகள், அம்மதம் பற்றி பொது மக்களுக்கு அறிவித்தல் போன்றவைகளுக்காக, Diyanet நிறுவனம் அமைக்கப்பட்டது. இங்கு நடந்த சந்திப்புடன், துருக்கி நாட்டுக்கான தனது முதல் நாள் பயண நிகழ்வுகளை நிறைவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.