2014-11-28 15:47:44

துருக்கி, ஒரு கண்ணோட்டம்


நவ.28,2014. உலக வரைபடத்தில் ஆசியா, ஐரோப்பா ஆகிய இரு கண்டங்களைக் கொண்டிருக்கும் தனித்துவம் பெற்ற நாடு துருக்கி. இந்நாட்டின் ஒரு சிறு பகுதி, அதாவது மூன்று விழுக்காட்டுப் பகுதி தென்கிழக்கு ஐரோப்பாவிலும், பெரும் பகுதி அதாவது 97 விழுக்காட்டுப் பகுதி மேற்கு ஆசியாவிலும் உள்ளன. இது புவியியல்முறைப்படி அல்ல, மாறாக, அரசியல்முறைப்படி இருப்பதாகக் கருதப்படுகின்றது. இந்த இரு கண்டங்களையும் இணைக்கும் பிரமாண்டமான பாலம், மனிதரால் கட்டப்பட்ட அதிசயங்களில் ஒன்றாக நோக்கப்படுகிறது. இந்தப் பாலம் துருக்கியின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கிறது எனலாம். மேற்கத்திய கலாச்சாரமும், கிழக்கத்திய கலாச்சாரமும், முற்போக்குக் கருத்தியலும், இஸ்லாமிய மதமும்.. என்று துருக்கி முழுக்க இரு வேறுபட்ட உலகங்களைக் காணலாம். எட்டு நாடுகளை எல்லைகளாகக் கொண்டுள்ள துருக்கியின் தெற்கே மத்திய தரைக்கடலும், மேற்கே ஏஜியன் கடலும், வடக்கே கருங்கடலும் உள்ளன. துருக்கி நாட்டின் தலைநகரம் அங்காரா. ஆயினும், துருக்கியின் மிகப்பெரிய நகரம் இஸ்தான்புல். தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள இஸ்தான்புல் நகரம், Bosphorus கடலால் இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.
2012ம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி. இந்நாட்டில் துருக்கி நாட்டவர் 85.7 விழுக்காடும், குர்த் இனத்தவர் 11 விழுக்காடும், அராபியர்கள் 1.5 விழுக்காடும், பிற மக்கள் 1.8 விழுக்காடும் உள்ளனர். மேலும், 98 விழுக்காட்டுக்கு அதிகமானோர் முஸ்லிம்கள். திருத்தூதர் பவுலடிகளார் நற்செய்தி அறிவித்த துருக்கி நாடு ஒரு காலத்தில், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ உலகின் மையமாக இருந்தது. ஆனால் தற்போது அந்நாட்டின் ஏறக்குறைய எட்டு கோடி மக்களில் ஏறக்குறைய ஒரு இலட்சத்து இருபதாயிரம் பேரே கிறிஸ்தவர்கள். துருக்கி நாட்டின் தென்கிழக்கே ஈராக்கும் சிரியாவும் அமைந்துள்ளன. எனவே, அந்நாடுகளில் இடம்பெற்றுவரும் சண்டைகளால், புலம்பெயர்ந்துள்ள மக்களில் ஏறக்குறைய 16 இலட்சம் பேர் துருக்கியில் உள்ளனர்.
அங்காரா, 1923ம் ஆண்டிலிருந்து துருக்கியின் தலைநகராக விளங்கி வருகிறது. துருக்கிக் குடியரசை நிறுவியவரும், ஒரு புரட்சியாளரும், வீரம் மிகுந்த படைவீரரும், மாபெரும் தலைவரும், அனைத்துலக அளவில் புகழ்பெற்றவருமாக நோக்கப்படும், அந்நாட்டுத் தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது. நாற்பது டன்கள் பளிங்குக் கற்களால் ஒன்பது ஆண்டுகள் கட்டப்பட்ட இந்நினைவுச் சின்னம், ஏழு இலட்சம் சதுர மீட்டர் பரப்பளவில், பத்துக் கோபுரங்களைக் கொண்டுள்ளது. அத்தாத்துர்க் இறந்து 15 ஆண்டுகள் கழித்து, 1953ம் ஆண்டில் அவரின் சவப்பெட்டி இவ்விடத்துக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இதைக் கட்டுவதற்கான வடிவமைப்பைப் பெறுவதற்கு அனைத்துலக அளவில் ஒரு போட்டி நடத்தப்பட்டது. இதில் பேராசிரியர் எமின் ஓனட் என்பவர் வெற்றி பெற்றார். இதன் முகப்பில் அமைக்கப்பட்டுள்ள 24 சிங்கங்கள், வீரத்துக்கும் பாதுகாப்புக்கும் அடையாளமாக உள்ளன. “வாழ்வதென்பது போராடுவது மற்றும் போரிடுவது. போராட்டத்தில் வெற்றி பெறுவதோடு மட்டுமே வாழ்வில் வெற்றி கிடைக்கும். ஒரு நாடு சுதந்திரம் இன்றி வாழ்ந்ததில்லை, வாழ முடியாது. விடுதலை அல்லது மரணம். ஒரு நாட்டின் வாழ்வு அச்சுறுத்தலுக்கு உள்ளாகாமல் இருக்கும்போது சண்டை தொடுப்பது ஒரு கொலைக் குற்றம்" போன்ற அத்தாத்துர்க்கின் கூற்றுகள் இந்த கல்லறை நினைவுச் சின்னத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.