2014-11-28 15:47:54

திருத்தந்தையின் துருக்கி நாட்டுத் திருப்பயணம் – முதல் நாள் நிகழ்வுகள்


நவ.28,2014. நவம்பர் 28, இவ்வெள்ளி உரோம் நேரம் காலை ஒன்பது மணிக்கு உரோம் Fiumicino பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து A320 ஆல் இத்தாலியா விமானத்தில் புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். முத்திப்பேறுபெற்ற திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், 1964ம் ஆண்டு புனித பூமிக்கு மேற்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க திருப்பயணத்திலிருந்து இந்நாள்வரை, திருப்பயணங்களின்போது ஆல் இத்தாலியா விமானங்களே திருத்தந்தையரை ஏற்றிச் செல்கின்றன. இவ்வெள்ளி காலையில் விமானத்தில் ஏறுவதற்கு முன்னர் Umberto Saba என்பவருக்குத் திருமுழுக்கு அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். தனது வழக்கமான கருப்புநிற பையுடன் விமானத்தில் ஏறிய திருத்தந்தை, அங்கிருந்த அனைவரையும் கைகுலுக்கி வாழ்த்தினார். இத்தாலிய அரசுத்தலைவர் ஜார்ஜோ நாப்போலித்தானோ அவர்களும் திருத்தந்தைக்கு வாழ்த்துத் தந்தி அனுப்பியிருந்தார். இத்திருப்பயணம், துருக்கி மக்களுக்கு, நம்பிக்கை நிறைந்த ஓர் எதிர்காலத்தை நோக்கச் செய்யும் எனக் குறிப்பிட்டிருந்தார் நாப்போலித்தானோ. திருத்தந்தையுடன் திருஅவையின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பன்னாட்டுப் பத்திரிகையாளர்களும் பயணம் செய்தனர்.
மூன்று மணி நேரம் விமானப் பயணம் செய்து, துருக்கி நேரம் பகல் ஒரு மணிக்கு, அங்காரா Esemboga பன்னாட்டு விமான நிலையம் சென்றடைந்தார் திருத்தந்தை. அப்போது இந்திய நேரம் இவ்வெள்ளி மாலை 4.30 மணியாகும். திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Lucibello, இன்னும், துருக்கி அரசுத்தலைவரின் பிரதிநிதியாக ஓர் அமைச்சரும் திருத்தந்தையை வரவேற்றனர். மற்ற அதிகாரப்பூர்வ வரவேற்புகள் அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்றன.
ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து துருக்கிக்குப் புலம்பெயர்ந்துள்ள மக்களுக்கு துருக்கி நாடு செய்துவரும் மனிதாபிமான உதவிகளைப் பாராட்டியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். அங்காரா Esemboga பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 45 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்திற்கு காரில் சென்று அதைப் பார்வையிட்டார் திருத்தந்தை. இங்குள்ள தேசிய உடன்படிக்கைக் கோபுரத்தில் வைக்கப்பட்டுள்ள பொன் புத்தகத்தில் கையெழுத்திட்டார். அதில், இரு கண்டங்களுக்குப் பாலமாக விளங்கும் துருக்கி நாடு, பாதைகள் கடந்துசெல்லும் இடமாக மட்டும் இல்லாமல், சந்திப்பின் இடமாகவும், நன்மனம் கொண்ட மக்கள், ஒவ்வொரு கலாச்சாரம், இனம், மதம் ஆகியவற்றின் மத்தியில், உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தின் இடமாகவும் அமையட்டும் என கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும், ரோஜா மலர் வளையும் ஒன்றையும் அத்தாத்துர்க் கல்லறையில் வைத்தார்.

துருக்கி தேசத்தந்தை முஸ்தாபா கமல் அத்தாத்துர்க் அவர்கள், பல்வேறு காரணங்களுக்காக, அங்காரா நகரத்தை, தலைநகராக ஏற்படுத்தினார். இந்நகரிலுள்ள அத்தாத்துர்க் கல்லறை நினைவுச் சின்னம், சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இடமாகவும், யுனெஸ்கோவின் பாரம்பரிய வளமையான இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.
அத்தாதுர்க் கல்லறை நினைவுச் சின்னத்தைப் பார்வையிட்ட பின்னர், அங்கிருந்து எட்டு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற அரசுத்தலைவர் மாளிகைக்குக் காரில் சென்றார் திருத்தந்தை பிரான்சிஸ். ”Ak Saray” அதாவது வெள்ளை மாளிகை என அழைக்கப்படும் இம்மாளிகை, ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டது. இதில் ஆயிரம் அறைகளும், ஐந்தாயிரம் பேர் அமரக்கூடிய ஒரு மசூதியும் உள்ளன. இங்கு திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பு வழங்கப்பட்டது. வத்திக்கான் மற்றும் துருக்கி நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. முக்கியமானவர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர். திருத்தந்தையும், துருக்கி அரசுத்தலைவர் Recep Tayyip Erdogan அவர்களும் தனியே ஓர் அறையில் கலந்துரையாடினர். பின்னர் மற்ற அதிகாரிகளும் திருத்தந்தையை கைகுலுக்கி வாழ்த்தினர். பின்னர் அரசுத்தலைவர் Erdogan அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். அறுபது வயதான அரசுத்தலைவர் Erdogan அவர்கள், கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக துருக்கி அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அதன் பின்னர் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும் துருக்கி நாட்டுக்கான தனது முதல் உரையை வழங்கினார்.
அதன் பின்னர், திருத்தந்தை, அரசுத்தலைவருக்கு உரோம் Castel Sant’Angelo” கலைவண்ண வேலைப்பாடுகள் கொண்ட ஒன்றை பரிசாக அளித்தார். இச்சந்திப்பை முடித்து துருக்கி பிரதமரையும் சந்தித்தார் திருத்தந்தை. இந்த முதல் நாள் திருப்பயணத் திட்டத்தில், துருக்கி சமய விவகாரத் துறைத் தலைவரைச் சந்தித்து உரையாற்றுவது உள்ளது. திருத்தூதர் பேதுரு, தனது சகோதரர் அந்திரேயாவைச் சந்திக்கும் பயணமாக துருக்கி நாட்டுக்கான இத்திருப்பயணம் அமைகின்றது என்று திருத்தந்தையே குறிப்பிட்டுள்ளார். அதன் காரணத்தை அடுத்தடுத்த இப்பயண நிகழ்வுகள் நமக்கு வெளிப்படுத்தும்.
புலம்பெயர்ந்தவர் பிரச்சனை, இன்னும் சில பிரச்சனைகளையும் எதிர்நோக்கி வரும் துருக்கி நாட்டில் அமைதியையும், இணக்க வாழ்வையும் மேம்படுத்தவும், மதங்களுக்கிடையில் மனம் திறந்த உரையாடலை ஊக்குவிக்கவும் இந்நாட்டுக்கான மூன்று நாள் திருப்பயணத்தை இவ்வெள்ளியன்று தொடங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். துருக்கி வரலாற்றில் அந்நாட்டுக்கு ஒரு திருத்தந்தை செல்கின்ற நான்காவது திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் முதல் திருப்பயணமாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஆறாவது வெளிநாட்டுத் திருப்பயணமாகவும் இது அமைந்துள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.