2014-11-28 15:44:00

திருத்தந்தை பிரான்சிஸ் - துருக்கி நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது


நவ.28,2014. பழமைக் கலாச்சாரத்தின் சுவடுகள், வரலாறு, இயற்கை அழகு அனைத்தும் நிறைந்த உங்கள் நாட்டிற்கு வந்திருப்பது குறித்து மகிழ்ச்சியடைகிறேன். பல்வேறுபட்ட கலாச்சாரங்களைக் கொண்டிருக்கும் ஜரோப்பா, ஆசியா என்ற இரு கண்டங்களை இணைக்கும் இயற்கைப் பாலமாக இந்நாடு அமைந்துள்ளது. புனித பவுல் அடியார் பிறந்த இடம் என்பதாலும், திருஅவையின் முதல் ஏழு சங்கங்கள் நடைபெற்ற இடம் என்பதாலும், இந்நாடு கிறிஸ்தவர்களுக்கு மிகவும் முக்கிய இடமாக அமைந்துள்ளது. இந்நாட்டில் அமைந்துள்ள எபேசு நகரத்திற்கு அருகே 'அன்னை மரியாவின் இல்லம்' இருந்ததாக பாரம்பரியம் சொல்வதால், இந்நாட்டின் முக்கியத்துவம் பெருகியுள்ளது. கிறிஸ்தவர்களுக்கு மட்டுமல்லாமல், இஸ்லாமியருக்கும் இப்பகுதி ஒரு புண்ணியத் தலமாக விளங்குகிறது.
பழமை வரலாறு மட்டும் துருக்கியின் புகழுக்குக் காரணம் அல்ல, மாறாக, இந்நாடு தற்போது கொண்டிருக்கும் கடின உழைப்பு, மக்களின் தாராள குணம் ஆகியவை இந்நாட்டைப் புகழ்பெறச் செய்துள்ளது.
உரையாடல் வழியே இந்த நாட்டுடன் நட்புறவை வளர்க்க எனக்கு கிடைத்த வாய்ப்பு மகிழ்வைத் தருகிறது. என் முன்னவர்களான முத்திப்பேறு பெற்ற ஆறாம் பால், புனித இரண்டாம் ஜான் பால், 16ம் பெனடிக்ட் ஆகியோர், மதிப்பு, மரியாதையுடன் மேற்கொண்ட உரையாடலை நானும் தொடர விழைகிறேன். இந்நாட்டில் திருத்தூதுப் பிரதிநிதியாக பணியாற்றி, இந்த உரையாடலுக்கு அடித்தளம் இட்ட Angelo Giuseppe Roncali அவர்கள், இரண்டாம் வத்திக்கான் சங்கத்தைக் கூட்டி, தற்போது புனித 23ம் ஜான் என விளங்குகிறார்.

இன்று நமக்கு மிகவும் தேவையானது, உரையாடல். ஒருவரை ஒருவர் மனதார மதித்து, நம்மிடையே உள்ள வேறுபாடுகளைப் புரிந்துகொண்டு வாழ்வதற்கு, உரையாடல் மிகவும் தேவை. மிகுந்த பொறுமையுடன் மேற்கொள்ளப்படும் இந்த உரையாடல் வழியே, நம்மிடம் உள்ள முற்சார்பு எண்ணங்கள் நீங்கவும், அச்சங்கள் அகலவும் வழிபிறக்கும்.
இஸ்லாமியர், யூதர், கிறிஸ்தவர் என்ற நாம் அனைவரும், ஒருவர் ஒருவரின் உரிமைகளையும், கடமைகளையும் மதிக்க முன்வந்தால், நாம் அனைவரும் உடன்பிறப்புக்கள் என்ற உணர்வில் வளரமுடியும். மத உரிமை, கருத்துரிமை இரண்டும் அனைவருக்கும் உறுதி செய்யப்பட்டால், அதுவே அமைதியின் மிக அழகிய அடையாளமாக விளங்கும்.
வளர்ச்சியடைந்த, பண்பட்ட இத்தகைய நட்புறவையே மத்தியக் கிழக்குப் பகுதி, ஐரோப்பா, உலகம் அனைத்தும் எதிர்பார்த்து நிற்கின்றன. உடன்பிறப்புக்கள் ஒருவரை ஒருவர் கொல்லும் போர்கள் பல மத்தியக் கிழக்குப் பகுதியில் தொடர்ந்து அரங்கேறுகின்றன. போர், வன்முறை ஆகியவற்றிற்கு, போரும் வன்முறையுமே பதிலாக அமையும் என்று இத்துன்பங்கள் தொடர்ந்து வருகின்றன.
மத்தியக் கிழக்குப் பகுதியை அழித்துவரும் இத்துன்பங்கள் இன்னும் எத்தனை காலம்தான் நீடிக்கவேண்டும்? இந்த அவல நிலைக்கு ஒரு மாற்று இல்லை என்று நாம் மனம் தளர்ந்து போகக்கூடாது. இறைவனின் துணையோடு, நாம் இப்பகுதியில் அமைதியைக் கொணரமுடியும் என்று நம்பிக்கை கொள்வோம்.
அரசுத் தலைவர் அவர்களே, அமைதி என்ற உயர்ந்த இலக்கை அடைவதற்கு, மதங்கள் மத்தியிலும், கலாச்சாரங்கள் மத்தியிலும் உரையாடல்கள் நடைபெற வேண்டும். உரையாடல் வழியே, நமது அடிப்படைவாதப் போக்குகள் மறைய வாய்ப்புண்டு.
மனித உயிர் மதிப்பு, மத உரிமை மதிப்பு என்ற இவ்விரண்டும், ஒருங்கிணைந்த வாழ்வைத் தாங்கும் தூண்கள். இத்தகைய ஒருங்கிணைந்த வாழ்வு, மத்தியக் கிழக்குப் பகுதியில் மிக அவசரமானத் தேவையாக உள்ளது.
ஆயினும், அண்மையக் காலம் வரை, மத்தியக் கிழக்குப் பகுதியின் நிலை தொடர்ந்து மோசமாகி வருகிறது. குறிப்பாக, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் வன்முறைகள் குறைவதாகத் தெரியவில்லை. கிறிஸ்தவர்கள், Yazidi இனத்தவர் என்ற இரு சிறுபான்மை குழுக்கள், மிக அதிக துன்பங்களை அடைந்து வருகின்றனர். பல்லாயிரம் பேர் தங்கள் இல்லங்களை விட்டு வெளியேறி வருகின்றனர்.
புலம் பெயரும் இம்மக்களை மிகுந்த தாராள மனதோடு துருக்கி நாடு வரவேற்று வருகிறது. துருக்கி நாடு ஆற்றிவரும் இந்த உதவிக்கு பன்னாட்டு ஆதரவு தேவை. இந்த மனிதாபிமான பிரச்சனையை இராணுவத்தின் துணைகொண்டு தீர்ப்பது மட்டும் சரியான தீர்வு அல்ல. அனைவரும் இணைந்து இந்த வன்முறைகளைத் தடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும்.
போர், இராணுவம், ஆயுதம் ஆகிய அழிவு வழிகளில் தங்களிடம் உள்ள செல்வங்களை செலவிடுவதை ஒவ்வொரு நாடும் நிறுத்திவிட்டு, பசி, வறுமை, ஒழிப்பு, வேலைவாய்ப்பு, தகுந்த வழிகளில் முன்னேற்றம், இயற்கை பாதுகாப்பு ஆகிய ஆக்கப்பூர்வமான வழிகளில் செலவிடுவதே இன்றைய முக்கியத் தேவை.
தனது வரலாறு, உலக வரைப்படத்தில் தான் கொண்டுள்ள முக்கியமான இடம், என்ற சக்திநிறைந்த அம்சங்களைப் பயன்படுத்தி, சந்திக்கும் கலாச்சாரத்தை வளர்ப்பதில், துருக்கி நாடு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்க வேண்டும். உண்மையான அமைதி, உறுதியான முன்னேற்றம் ஆகியவற்றை நிலைநாட்ட துருக்கி ஓர் உந்து சக்தியாக விளங்கவேண்டும்.
அமைதியை உருவாக்கும் கருவியாக துருக்கி நாடு விளங்க, இறைவன் ஆசீர் வழங்கி, இந்நாட்டைக் காப்பாராக!

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.