2014-11-27 15:53:29

உலக மக்களில் ஏழுபேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் குடிபெயரும் நிலையில் வாழ்கின்றனர்


நவ.27,2014. உலக மக்களில் ஏழுபேரில் ஒருவர் ஏதோ ஒருவகையில் குடிபெயரும் நிலையில் வாழ்கின்றனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
ஜெனீவா நகரில் இயங்கிவரும் ஐ.நா. அலுவலகங்களில், திருப்பீடத்தின் சார்பில் பணியாற்றும் பேராயர் சில்வானோ தொமாசி அவர்கள், பன்னாட்டுக் குடிபெயர்ச்சி என்ற தலைப்பில் நடைபெற்றுவரும் ஒரு கருத்தரங்கில் இப்புதனன்று உரையாற்றுகையில் இவ்வாறு கூறினார்.
குடிபெயர்தல் என்ற பிரச்சனையில், பெரியவர்களின் துணையின்றி குடிபெயரும் குழந்தைகளின் எண்ணிக்கை, வேறு எந்த நூற்றாண்டிலும் இல்லாத அளவு, அண்மைய ஆண்டுகளில் வளர்ந்துள்ளது என்ற கவலையை பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் வெளியிட்டார்.
நாடுகளிடையிலும், நாடுகளுக்குள்ளும் உருவாகியுள்ள போர்ச் சூழல், இயற்கைப் பேரிடர்கள், சுற்றுச்சூழல் பாதிப்பு என்ற பல காரணங்கள் இந்த உலகளாவிய குடிபெயர்தலை உருவாக்கியுள்ளன என்று பேராயர் தொமாசி அவர்கள் எடுத்துரைத்தார்.
குடிபெயர்தல் என்ற போக்கு உலகமயமாகிவிட்ட இன்றைய உலகில், நாடுகள் ஒருங்கிணைந்து தகுந்த முயற்சிகள் மேற்கொள்வது தவிர்க்கமுடியாத கட்டாயமாக மாறியுள்ளது என்று, பேராயர் தொமாசி அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.
சமத்துவம், நீதி, அமைதி ஆகிய உயர்ந்த மனித உரிமைகளை நிலைநாட்டாத வரை, குடிபெயர்தல் என்ற பிரச்னையை நம்மால் தீர்க்க முடியாது என்றும் பேராயர் தொமாசி அவர்கள் தன் உரையில் வலியுறுத்திக் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.