2014-11-26 16:07:07

"பெருநகரங்களில் மேய்ப்புப்பணி" - பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி


நவ.26,2014. உலகின் பெரு நகரங்கள் நாளுக்கு நாள் விரிவடைந்து வரும் இன்றையச் சூழலில், நகர்களில் நற்செய்தி பணிகளை மேற்கொள்ளும் வழிகளை ஆய்வு செய்ய நடைபெறும் கருத்தரங்கிற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று, திருத்தந்தை வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார்.
நவம்பர் 24, 25 ஆகிய இரு நாட்கள், இஸ்பெயின் நாட்டின் பார்சலோனா நகரில் "பெருநகரங்களில் மேய்ப்புப்பணி" என்ற கருத்துடன் நடைபெற்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
பார்சலோனா பேராயர், கர்தினால் Lluis Martinez Sistach அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இச்செய்தியில், நகரங்களில் காணப்படும் பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள் மத்தியில், கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவுடன் எடுத்துரைப்பது பெரும் சவால் என்று கூறியுள்ளார்.
பார்சலோனா நகரில் அமைந்துள்ள 'Sacrada Familia' எனப்படும் புகழ்பெற்ற பசிலிக்காவில் இக்கருத்தரங்கின் நிறைவுக் கூட்டம் நடைபெறுவது, நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற உண்மையைப் பகரும் ஓர் அடையாளமாக உள்ளது என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் ஐந்து கண்டங்களில் உள்ள பெருநகரங்களில் பணியாற்றும் கர்தினால்கள், ஆயர்கள், அருள் பணியாளர்கள், இருபால் துறவியர் ஆகியோர் கலந்துகொண்ட இந்த பன்னாட்டுக் கருத்தரங்கின் உறுப்பினர்கள், இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வத்திக்கானில் சந்திக்கின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.