2014-11-26 16:20:19

திருத்தந்தையின் புதன் பொதுமறையுரை :


நவ.26,2014. இறையரசை நோக்கி நடைபோடும் திருப்பயணியாக திருஅவை உள்ளது என்ற கருத்தை மையம் கொண்டதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இப்புதன் மறையுரை இருந்தது.
திருஅவை என்பது தன்னிலையிலேயே முடிவுறும் ஒன்றல்ல, மாறாக, அது வரலாறு முழுவதும் விண்ணக அரசை நோக்கி நடைபோடுகிறது. அந்த விண்ணக அரசின் விதையாகவும் துவக்கமாகவும் இந்த மண்ணுலகத் திருஅவை உள்ளது. அகில உலகமும் புதிய விண்ணக எருசலேமாக உருமாற்றம் பெற்று, இறை அன்பு, அமைதி மற்றும் மகிழ்வால் முற்றிலுமாக நிறைக்கப்படும்போது, திருஅவையின் பயணம் தன் நிறைவைக் காணும். இறந்தவர்களுடன் நமக்குள்ள ஒன்றிப்பின்வழி, இவ்வுலக திருஅவையுடனும் வானக திருஅவையுடனும் ஒன்றிப்பை நாம் இவ்வுலகிலும் அனுபவிக்கிறோம். வானுலகில் இருக்கும் ஆன்மாக்கள் நமக்காக செபிக்கும் அதேவேளை, உத்தரிக்கும் தலத்திலுள்ள ஆன்மாக்களுக்காக நம் செபம், நற்செயல்கள் மற்றும், திருநற்கருணை பங்கேற்பு வழியாக நாமும் உதவுகிறோம். திருஅவையின் அங்கத்தினர்களாகிய நாம் இங்கு காண்பது, இறந்தவர்கள் யார், வாழ்ந்துகொண்டு இருப்பவர் யார் என்பதை அல்ல, மாறாக, யார் கிறிஸ்துவோடு இருக்கிறார்கள், யார் அவருடன் இல்லை என்பதையே. புனித பவுல் இன்னும் ஒருபடி மேலே போய் கூறுகிறார், 'மனிதகுலம் மட்டுமல்ல, படைப்புகள் அனைத்தும் அழிவிலிருந்து விடுதலைபெறும்' என்று. அனைத்துப் பொருட்களும் தங்களின் இருப்பு, உண்மை, மற்றும் அழகின் முழுமைத்தன்மைக்குக் கொணரப்படும். இதுவே நமக்கென உருவாக்கப்பட்டுள்ள இறைத் திட்டம்; மற்றும், திருஅவைக்கு வழங்கப்பட்டுள்ள அழைப்பு. நாம் கடந்துச் செல்லும் பாதையில் நம்மைக் கண்காணித்து வழிநடத்தவும், நம் சகோதர சகோதரிகளிடையே நம்பிக்கை மற்றும் விசுவாசத்தின் மகிழ்வுநிறை அடையாளமாக நாம் இருக்கவும் உதவுமாறு திருஅவையின் தாயாம் அன்னைமரி நோக்கி வேண்டுவோம்.
இவ்வாறு, தன் புதன் பொது மறையுரையை வழங்கியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வரும் ஞாயிறன்று திருவருகைக்காலம் துவங்குவதையும் நினைவுபடுத்தினார். 'அன்புநிறை இளையோரே! மீட்பருக்காக காத்திருக்கும் இக்காலம், உங்கள் இதயங்களை மகிழ்வால் நிரப்புவதாக!’ என்றார். மேலும், இவ்வாரம் வெள்ளி முதல் ஞாயிறு வரை தான் துருக்கி நாட்டில் மேற்கொள்ளவுள்ள திருப்பயணம் குறித்தும் எடுத்துரைத்து, தனக்காக செபிக்குமாறும் வேண்டினார். தன் சகோதரர் அந்திரேயாவை நோக்கி பேதுரு மேற்கொள்ளும் இப்பயணம், துருக்கி நாட்டிற்கு இணக்கவாழ்வையும், மதங்களிடையே அமைதி மற்றும் மனம் திறந்த பேச்சுவார்த்தைகளின் கனிகளையும் பெற்றுத்தருமாறு இறைவனை நோக்கி அனைவரும் செபிக்குமாறுக் கேட்டுக்கொண்டார். பின், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.