2014-11-26 15:56:39

திருத்தந்தை பிரான்சிஸ் - தீவிரவாதிகளை ஒழிக்க அரசுகள் மேற்கொள்ளும் வன்முறைப் போக்குகளும் தீவிரவாதமாக உள்ளது


நவ.26,2014. ISIS போன்ற தீவிரவாத குழுக்கள் இருப்பது உண்மை; ஆயினும், தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக அரசுகள் மேற்கொள்ளும் வன்முறைப் போக்குகளும், அரசு அதிகாரம் பெற்ற தீவிரவாதமாக உள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
பிரான்ஸ் நாட்டின், Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றம், மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அவை ஆகியவற்றில், இச்செவ்வாயன்று உரையாற்றிவிட்டு, மீண்டும் உரோம் நகர் திரும்புகையில், விமானப் பயணத்தில் பேட்டியளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசு அதிகாரம் பெற்ற தீவிரவாதம் உட்பட பல்வேறு கருத்துக்களை, செய்தியாளர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
பிரெஞ்ச், இஸ்பானியம், இத்தாலியம், ஆங்கிலம் ஆகிய மொழிகள் பேசும் செய்தியாளர்களின் பிரதிநிதிகளாக ஐவர் விடுத்த கேள்விகளுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பதிலளித்தார்.
சமுதாயச் சிந்தனைகளை அடிக்கடி பேசும் திருத்தந்தை, ஒரு சமூகவாதியா என்று கேட்ட செய்தியாளரிடம், கத்தோலிக்கத் திருஅவை வெளியிட்டுள்ள சமூகச் சிந்தனைகளையே தான் பகிர்ந்துகொள்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
தீவிரவாதிகளை ஒழிப்பதாகக் கூறி, அரசு மேற்கொள்ளும் வன்முறைத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் ஆயிரமாயிரம் பேர் கொல்லப்படுவது நீதியல்ல என்றும், பன்னாட்டு அரசுகளுடன் கலந்தாலோசித்து, அரசுகள் இத்தகைய முடிவுகளை எடுக்கவேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தான் மேற்கொள்ளும் ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் இறுதியிலும் செய்தியாளர்களுடன் மனம் விட்டுப் பேசும் நேர்முகம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.