2014-11-26 16:04:54

திருத்தந்தை எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை தேடுவதில், ஐரோப்பாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது - ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு


நவ.26,2014. அமைதியை மையப்படுத்தும் முன்னேற்றப் பாதையில் ஐரோப்பா பயணிக்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Strasbourg நகரில் கூறியது, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள அனைவருக்கும் மகிழ்வைத் தந்துள்ளது என்று ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவே, உன் சக்தி எங்கே? உன் வரலாற்றை வடிவமைத்து, உன்னைத் தூண்டிவந்த கருத்தியல் எங்கே? உண்மையைக் கண்டுபிடிக்கும் உன் தாகம் எங்கே? என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு விடை தேடுவதில், ஐரோப்பாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது என்று பேரவைகளின் கூட்டமைப்பு கூறியுள்ளது.
ஐரோப்பாவில் பணியாற்றும் கத்தோலிக்கத் திருஅவையின் நற்பணிகள் குறித்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரைகளில் குறிப்பிட்டுள்ளது மனநிறைவைத் தருகிறது என்றும் இந்தக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
CCEE எனப்படும் ஐரோப்பிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு தலைவர் கர்தினால் Peter Erdő அவர்களும், இக்கூட்டமைப்பின் ஏனைய பொறுப்பாளர்கள் சிலரும் திருத்தந்தை உரை வழங்கிய கூட்டங்களில் பங்கேற்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.