2014-11-26 16:03:53

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது திருத்தந்தை மதிப்பு கொண்டுள்ளார் - கர்தினால் Marx


நவ.26,2014. மனித மாண்பை நிலைநாட்டும் அடிப்படையில், ஐரோப்பியக் கண்டத்தில் உள்ள நாடுகள் ஒருங்கிணைந்து வரும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு வழங்கிய முக்கிய செய்தி என்று, ஐரோப்பிய ஒன்றிய கத்தோலிக்க ஆயர் குழுவின் தலைவர், கர்தினால் Reinhard Marx அவர்கள் கூறினார்.
ஐரோப்பாவில் உள்ள தனியொரு நாட்டிற்குச் செல்லாமல், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கும், ஐரோப்பிய ஒன்றிய அவைக்கும் வருகை தந்தது, ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது அவர் கொண்டிருக்கும் மதிப்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது என்று கர்தினால் Marx அவர்கள் குறிப்பிட்டார்.
ஐரோப்பிய ஒன்றியம், சுற்றுச்சூழல் மீது காட்டும் அக்கறையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சிறப்பாகக் குறிப்பிட்டு, பாராட்டியது வரவேற்கத்தக்கது என்று கர்தினால் Marx அவர்கள் கருத்து தெரிவித்தார்.
ஐரோப்பிய ஒன்றியமும், பல்வேறு மதக் குழுக்களும் உரையாடல்களை மேற்கொள்ளவேண்டும் என்று திருத்தந்தை சுட்டிக்காட்டியது, கவனத்தில் கொள்ளவேண்டிய ஒரு கருத்து என்று கர்தினால் Marx அவர்கள் எடுத்துரைத்தார்.
ஐரோப்பா, உலக நாடுகள் அனைத்திற்கும் ஒரு வழிகாட்டியாக, ஓர் எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்தியது, ஐரோப்பியக் கண்டத்தை ஊக்குவிக்கும் மருந்தாக அமையும் என்று கர்தினால் Marx அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.