2014-11-26 16:13:36

இலங்கை அரசுத் தலைவர், திருத்தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அடங்கிய சுவரொட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்


நவ.26,2014. இலங்கையில் நடைபெறவிருக்கும் அரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அரசுத் தலைவர், Mahinda Rajapaksa அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உருவம் பதித்தப் புகைப்படங்களை விளம்பரப்படுத்தியுள்ளதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள் தங்கள் கண்டனத்தை வெளியிட்டுள்ளனர்.
சனவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி முடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையில் மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணத்தை, எவ்வகையிலும் தவறாகப் பயன்படுத்தி அரசியல் தலைவர்கள் விளம்பரம் தேடக்கூடாது என்று தலத்திருஅவை ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.
தங்கள் எச்சரிக்கையை மீறி, தற்போதைய அரசுத் தலைவர், Rajapaksa அவர்கள், திருத்தந்தையுடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சுவரொட்டிகளாக அச்சிட்டு வெளியிட்டுள்ளதை, உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என்று, இலங்கை கத்தோலிக்க சமூக ஊடக மையத்தின் இயக்குனர், அருள்பணி Cyril Gamini Fernando அவர்கள் கூறியுள்ளார்.
அரசுத் தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து நடைபெற்ற சில வன்முறைகள் குறித்து அரசு தீவிர விசாரணைகள் நடத்தவேண்டும் என்று சுதந்திரமான, நீதியான தேர்தல் என்ற அமைப்பினர் அரசிடம் விண்ணப்பித்துள்ளதாக, UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலங்கைக்குச் செல்லும் சனவரி 13ம் தேதிக்கு, ஐந்து நாட்களுக்கு முன்னதாக, அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

ஆதாரம் : UCAN








All the contents on this site are copyrighted ©.