2014-11-25 15:36:33

புனிதரும் மனிதரே - "மிகச் சிறிய விடயங்களில் மிக அதிக அக்கறை கொள்ளவேண்டும்"


1599ம் ஆண்டு, பெல்ஜியம் நாட்டில், Diest என்ற ஊரில், காலணிகள் செய்யும் ஜான் சார்ல்ஸ் என்பவருக்கும், எலிசபெத் என்ற பெண்மணிக்கும் முதல் மகனாகப் பிறந்தவர், ஜான் பெர்க்மன்ஸ். இவருக்கு 9 வயதானபோது, இவரது தாய் நோயுற்று, படுத்த படுக்கையானார். அப்போது, சிறுவன் ஜான், அன்னையருகே இரவும், பகலும் அமர்ந்து அவரைக் கண்காணித்து வந்தார். அன்னையின் உடல்நலனுக்காக ஊருக்கு அருகில் இருந்த ஒரு திருத்தலத்திற்கு நடைபயணம் மேற்கொண்டார். இல்லத்தின் வறுமையை உணர்ந்த ஜான், ஒரு திருஅவை அதிகாரியின் இல்லத்தில் பணியாளராகச் சேர்ந்து, தனக்குக் கிடைத்த வருவாயில், பள்ளிப்படிப்பைத் தொடர்ந்தார்.
அவருக்கு 15 வயதானபோது, இயேசு சபையில் தான் சேர விழைவதாகத் தந்தையிடம் தெரிவித்தபோது, அவர் அதை கடுமையாக எதிர்த்தார். இருப்பினும், ஓராண்டுக்கும் மேலாக ஜான், தன் தந்தையோடு போராடி, இறுதியில், தன் 17வது வயதில் இயேசு சபையில் சேர்ந்தார். "மிகச் சிறிய விடயங்களில் மிக அதிக அக்கறை கொள்ளவேண்டும்" என்பது, இவர் வாழ்வின் தாரக மந்திரமானது. நவதுறவு இல்லம் துவங்கி, தன் இறுதி மூச்சுவரை, அவர், இயேசு சபையின் அனைத்து விதிமுறைகளையும் எள்ளளவும் பிசகாமல் வாழ்ந்தார் என்பது உலகறிந்த உண்மை.
இவர் உரோம் நகரில் தத்துவ இயல் படித்துக்கொண்டிருந்த வேளையில், 1621ம் ஆண்டு, ஆகஸ்ட் மாதம், உரோம் நகர், கிரேக்கக் கல்லூரியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசுவதற்கு இல்லத் தலைவர் இவரை அனுப்பிவைத்தார். இளையவர் ஜானின் பேச்சுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைவரையும் கவர்ந்தன.
கருத்தரங்கு முடிந்து திரும்பியபிறகு, ஜானின் உடல் நலம் குன்றத் துவங்கியது. அப்போது உரோம் நகரில் பரவியிருந்த கடுமையான காய்ச்சலால் ஜான் பாதிக்கப்பட்டார். இந்தக் காய்ச்சல் காரணமாக, 1621ம் ஆண்டு, ஆகஸ்ட் 13ம் தேதி, 22 வயதான ஜான் இறைவனடி சேர்ந்தார். இவரது மரணம் குறித்து அறிந்த உரோம் நகர் மக்கள், ஆயிரக்கணக்காக கூடிவந்து, இவரது உடலைக் கண்டு வணங்கினர். இவரது இறுதி ஊர்வலத்தின்போது புதுமைகள் நிகழ்ந்ததாகவும் சொல்லப்படுகிறது.
"இளவயதில் என்னால் புனிதராக வாழமுடியாவிடில், புனிதராகவே ஆகமுடியாது" என்று இளையவர் ஜான் அடிக்கடி சொல்லிவந்தார். இயேசு சபை விதிமுறைகளை, மிக, மிக நுணுக்கமாகப் பின்பற்றி, இவர் புனிதம் அடைந்ததால், இவரது ஓவியத்தில், விதிமுறைகள் நூலையும், சிலுவையையும் இவர் கரங்களில் இறுக்கமாகப் பற்றியிருப்பதைக் காணலாம். 1888ம் ஆண்டு புனிதராக உயர்த்தப்பட்ட ஜான் பெர்க்மன்ஸ் அவர்கள், திருப்பலிக்கு உதவிகள் செய்யும் பீடச்சிறுவரின் பாதுகாவலாராகக் கருதப்படுகிறார். புனித ஜான் பெர்க்மன்ஸ் அவர்களின் திருநாள், நவம்பர் 26ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.