2014-11-25 15:27:32

திருத்தந்தை ஐரோப்பிய பாராளுமன்றத்தில் வழங்கிய உரையின் சுருக்கம்


நவ.25,2014. ஐரோப்பிய ஒன்றியத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் என்னைப் பேசுவதற்கு அழைத்த உங்களுக்கு என் நன்றி. ஐரோப்பிய மக்களின் பிரதிநிதிகளாகிய உங்கள் வழியாக, 28 நாடுகளைச் சேர்ந்த 50 கோடிக்கும் மேற்பட்ட மக்களுடன் நான் பேசமுடிகிறது.
திருத்தந்தை 2ம் ஜான்பால் அவர்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உரையாற்றியதற்குப் பின் 25 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழிந்துவிட்டன. இந்த ஆண்டுகளில் இரு கூறுகளாகப் பிரித்திருந்த ஐரோப்பா ஒன்றிணையத் துவங்கியுள்ளது.
ஓர் ஆன்மீக மேய்ப்பர் என்ற முறையில், ஐரோப்பிய குடிமக்களுக்கு நம்பிக்கையும், உற்சாகமும் தரும் செய்தியை உங்களுக்கு வழங்க விரும்புகிறேன். ஐரோப்பிய மக்களிடையே நிலவும் அச்சம் விலகி, இந்த நம்பிக்கையால் நாம் ஒன்றுபடுவோம். சாவை வாழ்வாலும், தீமையை நன்மையாலும் வென்ற ஆண்டவரிடமிருந்து வரும் நம்பிக்கை இது.
ஐரோப்பிய ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கிய முன்னோர், ஐரோப்பிய நாடுகள் அரசியல் வழியாக ஒருங்கிணைவதை விரும்பினர். மனிதர்கள் மீது கொண்ட நம்பிக்கையே, அந்த ஒற்றுமைக் கனவின் அடித்தளம். மனிதர்களை ஒரு பொருளாதார கண்ணோட்டத்தில் காணாமல், அவர்கள் இவ்வுலகைத் தாண்டிய மாண்புக்கு உரியவர்கள் என்ற எண்ணமே இந்த ஒற்றுமைக் கனவை உருவாக்கியது.
'மாண்பு', 'இவ்வுலகைத் தாண்டிய நிலை' என்ற இவ்விரு சொற்றொடர்களை நான் வலியுறுத்த விரும்புகிறேன்.
மாண்பு என்பது ஒவ்வொரு தனி மனிதருக்கும் உள்ள அடிப்படை உரிமை. மனித உரிமையை வலியுறுத்தும் ஐரோப்பிய ஒன்றியம், இந்த மாண்பை உணரவேண்டும். இந்த மாண்பு மறக்கப்பட்டால், மனித உயிரை உருவாக்குதல், பல்வேறு தேவைகளுக்குத் தகுந்தாற்போல் மனிதர்களைப் பயன்படுத்துதல், தேவையற்ற மனிதர்களைத் தூக்கி எறிதல் ஆகிய நிலைகளுக்கு உள்ளாவோம்.
பல்வேறு பாகுபாடுகளால் தவிக்கும்போதும், உணவு முதற்கொண்ட அடிப்படை தேவைகளின்றி துன்புறும்போதும், மனிதர்கள், எவ்விதம் தங்கள் மாண்பை அனுபவிக்கமுடியும்?

மனித மாண்பு என்று சொல்லும்போது, தனிப்பட்ட மனிதர்களின் மாண்பை மட்டும் வலியுறுத்துவது, ஆழ்ந்த சுயநலத்தில் நம்மைப் புதைத்துவிடும். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள மாண்பு, மனித சமுதாயம் என்ற குடும்பத்திலிருந்து வருவது. எனவே, தனி மனிதருக்கும், சமுதாயத்திற்கும் மாண்பு வழங்கப்படவேண்டும். மற்றவரோடு தொடர்புகள் அற்ற தனி மனித மாண்பு, சுயநலத்தை வளர்த்து, அதன் விளைவாக, பல வன்முறைகளை வளர்க்கும்.
ஐரோப்பிய நாடுகளில் பெருமளவு காணப்படும் ஒரு தீமை, தனிமை. அவரவர் தன் தனிப்பட்ட நலனை மட்டும் வலியுறுத்துவதால், தனிமை என்ற தீமை பரவி வருகிறது. இந்தத் தனிமையில் அதிகம் பாதிக்கப்படுபவர்கள், முதியோரே! முதியோர் பயனுள்ளவற்றை உருவாக்கும் வயதைக் கடந்துவிட்டதால், அவர்களை ஒதுக்கி வைக்கும் போக்கு நம்மிடையே பரவியுள்ளது.
பயனுள்ளவற்றை மட்டுமே அளவுகோலாக கருதும் நமது அரசுகள், மேற்கொள்ளும் விவாதங்களில், பொருளாதாரமும், தொழில் நுட்பமும் அதிகம் இடம்பெறுகின்றனவே தவிர, மனிதர்கள் இடம்பெறுவதில்லை. ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற முறையில், மனிதர்களை மையப்படுத்தும் விவாதங்கள், திட்டங்கள் ஆகியவற்றை நிலைநிறுத்துவது உங்கள் கடமை.
தனி மனிதர்களையும், சமுதாயத்தையும் பேணிக் காப்பது என்றால், நமது நினைவுகளையும், நம்பிக்கையையும் பாதுகாப்பது என்று பொருள். நினைவுகளைக் கொணரும் முதியோரும், நம்பிக்கையைக் கொணரும் இளையோரும் நம் கவனத்திற்கு வரவேண்டும்.
விண்ணை நோக்கிய பார்வையும், மண்ணையும், மனிதர்களையும் நோக்கிய பார்வையும் நம் கருத்தில் இடம்பெறவேண்டும். இவ்விரு பார்வைகளையும் இணைக்கும்போது, அமைதி, தனிமனித மாண்பு, அடிப்படை உரிமை, ஒருங்கிணைந்த முயற்சி அனைத்தும் சாத்தியமாகும். ஒவ்வொரு தனி மனிதரும் கொண்டுள்ள மத உணர்வுகளின் வேர்களை மதிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம் கற்றுக்கொள்ளவேண்டும்.

ஐரோப்பிய மக்களிடையே குடியரசை போற்றிவளர்ப்பது உங்கள் கடமை. இன்றைய உலகில் குடியரசைக் கட்டிக்காப்பது ஒரு பெரும் சவால். பன்னாட்டு அரசுகளின் கட்டாயங்களால், ஒவ்வொரு நாடும் தன் குடியரசைக் காப்பது கடினமாகி வருகிறது.
இத்தகையச் சூழலில் மனித ஆளுமையை மையமாகக் கொண்டு செயல்படுவதே, ஐரோப்பாவிற்கு நம்பிக்கை தரும் விடயமாக அமையும். இந்த நம்பிக்கையை வளர்க்க, கல்வி என்ற அம்சத்தில் கவனமுடன் செயல்படவேண்டும். குடும்பங்களில் துவங்கும் இக்கல்வி, பள்ளிகள், பல்கலைக் கழகங்கள் என்று அனைத்து நிலைகளிலும் தொடரப்படவேண்டும். தனி மனிதர்கள் முழுமையான மனிதர்களாக உருவாக நமது கல்வி உதவியாக இருக்கவேண்டும்.
இயற்கையைப் பாதுகாப்பது ஐரோப்பிய நாடுகளின் முக்கியப் பண்பாக இருந்துள்ளது. இந்தப் பண்பைக் கைவிடாமல் காப்பாற்றுவது நம் கடமை. இயற்கையின் முதலாளிகள் நாம் அல்ல, அதனைப் பாதுகாப்பவர்கள் என்ற உணர்வோடு நாம் செயலாற்றவேண்டும்.
ஐரோப்பாவின் நம்பிக்கையை வளர்க்க நாம் மேற்கொள்ளவேண்டிய அடுத்த முயற்சி, நமது தொழில் உலகைப் பேணிக் காப்பது. மனிதர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களுக்குத் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவது அவசியம்.
நாடுவிட்டு நாடு குடிபெயரும் மக்களைக் குறித்த கேள்விக்கு, ஐரோப்பிய ஒன்றியம் தகுந்த பதில் தரவேண்டும். குடிபெயர்தல் என்ற நிலையின் வேருக்குச் சென்று பதில் தர கடமைப்பட்டுள்ளோம். மத்தியத்தரைக் கடல், பரந்து விரிந்த ஒரு கல்லறையாக மாறிவிடக் கூடாது! ஒவ்வொரு நாளும், ஆண்களையும், பெண்களையும் நிரப்பிய வண்ணம் ஐரோப்பியக் கரைகளை அடையும் படகுகளில் வருவோரை வரவேற்கவும், உதவிகள் செய்யவும் நாம் தயாராக இருக்கவேண்டும்.

இறுதியாக, ஐரோப்பா தனது மிகச் சிறப்பான பண்புகளை மீண்டும் கண்டுபிடிக்க நீங்கள் அனைவரும் முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும் என்று உங்களைத் தூண்டுகிறேன். "உடலுக்கு ஆன்மா என்பதுபோல், உலகிற்கு கிறிஸ்தவர்கள்" என்று இரண்டாம் நூற்றாண்டில் பெயர் தெரியாத ஒருவர் எழுதிச் சென்றார். இரண்டாயிரம் ஆண்டுகள் வரலாறு, ஐரோப்பாவையும், கிறிஸ்தவத்தையும் இணைத்துள்ளது. இந்த வரலாறு பிரச்சனைகள் அற்றது அல்ல. ஆனால், அனைத்து பிரச்சனைகள், போராட்டங்கள் மத்தியில், உண்மையை, அழகை, நன்மையை அனைவரும் காணவேண்டும் என்ற உந்துதல் இருந்து வந்துள்ளது.
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களே, பொருளாதாரத்தின் அடிப்படையில் அல்ல, மனிதர் என்ற புனிதத்தை அடிப்படையாகக் கொண்டு ஐரோப்பாவைக் கட்டியெழுப்ப உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஐரோப்பிய நாடுகள், தனித்தனியாக தங்களைக் காத்துக் கொள்வதற்காக அச்சத்துடன் தன் எல்லைகளை மூடிக்கொள்ளாமல், திறந்த மனதோடு அனைவரும் இணைந்து, புத்துணர்வு தரும் தலைமையை ஏற்றுக் கொள்ளுங்கள். அறிவியல், கலை, இசை, மனித மதிப்பீடுகள், மத நம்பிக்கை என்ற அனைத்து அம்சங்களையும் வளர்க்கும் ஒரு கண்டமாக ஐரோப்பாவை உருவாக்குங்கள்.
விண்ணகத்தைக் கருத்தில் கொண்டுள்ள ஐரோப்பா, மண்ணகத்தைக் கட்டியெழுப்பும் முயற்சியில் முழுமையாக ஈடுபடுவதாக!


ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.