2014-11-25 16:24:32

ஐரோப்பிய பாராளுமன்றம் – ஒரு விளக்கம்


ஐரோப்பிய பாராளுமன்றம் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட அவையாகும். இதில் 751 பிரதிநிதிகள் உள்ளனர். மக்களால் நேரடியாக ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் பராளுமன்றங்களுள் இது இரண்டாவது மிகப் பெரிய பாராளுமன்றமாகும். முதலாவதாக வருவது இந்திய பாராளுமன்றம். உலகிலேயே நாடுகளுக்கிடையே ஏறத்தாழ 37 கோடியே 50 இலட்சம் வாக்காளர்களைக்கொண்டு இவ்வளவு பெரிய அளவில் தேர்தலைச் சந்திப்பதும் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம்தான். இந்தியாவில் நடக்கும் தேர்தல் நாடுகளுக்கு இடையேயானதல்ல.
28 அங்கத்தினர் நாடுகளைக்கொண்ட இந்த பாராளுமன்றத்தின் அங்கத்தினர்கள், நாடு வாரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும், அவர்கள் செய்ல்படுவதோ கட்சிவாரியாகத்தான். 751 அங்கத்தினர்களும் 7 முக்கிய கட்சிக்கொள்கைகளின் கீழ் குழுக்களாக செயல்படுவதுடன், அந்த 751 அங்கத்தினர்களுக்குள்ளேயே, எந்தக்கட்சியையும் சாராமல் 52 பேரும் உள்ளனர். ஐந்தாண்டிற்கு ஒருமுறை ஐரோப்பிய பாராளுமன்ற தேர்தல் இடம்பெறும். எட்டாவது முறையாக, இப்பாராளுமன்றத்திற்கான தேர்தல், இவ்வாண்டு மேமாத இறுதியில் இடம்பெற்றது.
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் உள்ள முக்கியக்கட்சிகளாக EPP எனப்படும் ஐரோப்பிய மக்கள் கட்சியையும் S&D எனப்படும் சோசலிஸ மற்றும் சனநாயக முன்னேற்ற கூட்டணியையும் குறிப்பிடலாம். ஐரோப்பிய பாராளுமன்றம், Strasbourg, Luxembourg மற்றும் Brussels என்ற மூன்று இடங்களிலுள்ள அலுவலகங்கள் வழியே செயலாற்றுகின்றது. ஐரோப்பிய பாராளுமன்றம் Strasbourgல் இருக்கும் அதேவேளை, அதன் பொதுச்செயலகம் எனப்படும் நிர்வாக அலுவலகங்கள் Luxembourgல் உள்ளன. பாராளுமன்றத்தின் பல்வேறு அவைகளின் கூட்டங்கள் Brusselsல் இடம்பெறும். தற்போது இந்த பாராளுமன்றத்தின் தலைவராக இருப்பவர் சோசலிச மற்றும் ஜனநாயக முன்னேற்றக் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த, ஜெர்மன் நாட்டவரான மார்ட்டின் சுல்ஸ் (Martin Schulz) அவர்கள். இவருக்குக் கீழ் 14 துணைத்தலைவர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.