2014-11-25 16:27:05

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் திருத்தந்தை


நவ. 25, 2014. பிரான்சின் Strasbourg நகரில் அமைந்துள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு தன் ஒரு நாள் திருத்தூதுப் பயணத்தை இச்செவ்வாய்க்கிழமை மேற்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ். ஐரோப்பியப் பாராளுமன்றத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் திருப்பயணம் மேற்கொள்வது இதுவே முதன்முறையாகும். இதற்கு முன் திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள், 1988ம் ஆண்டு சென்றுள்ளார்.
உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் 2.30 மணிக்கு Strasbourg வந்தடைந்த திருத்தந்தையை, திருஅவை அதிகாரிகளும் அரசு அதிகாரிகளும் விமான நிலையத்தில் வரவேற்றனர். அங்கிருந்து 18 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஐரோப்பிய பாராளுமன்றத்தைத் திருத்தந்தை வந்தடைந்தபோது, உள்ளூர் நேரம் காலை 10 மணி 35 நிமிடங்கள். ஐரோப்பிய பாராளுமன்றத் தலைவர் மார்ட்டின் சுல்ஸ் வெளியே வந்து நின்று திருத்தந்தையை வரவேற்றார். பாராளுமன்ற கட்டிடத்துக்கு வெளியே தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் ஏறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு கூடியிருந்த பாராளுமன்ற அங்கத்தினர்கள் மற்றும் பணியாளர்களின் குடும்பங்களை நோக்கிக் கையசைத்து புன்முறுவல் பூத்தார். திருத்தந்தை அந்த மேடையில் நின்றுகொண்டிருக்க, வத்திக்கான் தேசியப் பண் இசைக்கப்பட்டதுடன், வத்திக்கான் நாட்டுக் கொடியும் ஏற்றப்பட்டது. அதன் பின் நாடுகளின் தலைவர்களுக்கென ஒதுக்கப்பட்ட வாசல் வழியாக ஐரோப்பிய பாராளுமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் திருத்தந்தை. அங்கு ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தங்கப் புத்தகத்தில் 'ஐரோப்பா தன் நிகழ்காலத்தை நம்பிக்கையுடன் வாழ்வதற்கு உதவும் நோக்கில், தன் கடந்த காலத்தைக் கவனத்தில் கொள்ளவும், வருங்காலத்தை உற்று நோக்கவும், ஐரோப்பிய பாராளுமன்றம், உரிய இடமாக இருப்பதாக' என எழுதி கையெழுத்திட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
அதன்பின், பாராளுமன்றத் தலைவருடன் சிறிது நேரம் தனியாக உரையாடிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாராளுமன்ற அரங்கிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். முதலில் தலைவர் மார்ட்டின் செல்ஸ், திருத்தந்தையை வாழ்த்தி வரவேற்க, திருத்தந்தையும் தன் உரையை அங்கு குழுமியிருந்த ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு வழங்கினார். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை முடித்தபோது, பாராளுமன்ற அங்கத்தினர்களின் கைதட்டல் தொடர்ந்துகொண்டேயிருந்தது. இரண்டு மூன்று நிமிடங்கள் இடைவெளியின்றி தொடர்ந்து நீடித்த இந்த கைதட்டல், ஐரோப்பிய பராளுமன்றத்திற்கே புதியதாகவும் புதுமையானதாகவும் இருந்திருக்கவேண்டும்.
இந்த பாராளுமன்றக் கட்டிடத்தில் திருத்தந்தையைக் காண 97 வயது ஜெர்மன் மூதாட்டி ஒருவர் வந்திருந்தார். இவர் 1985ம் ஆண்டு, திருத்தந்தை ஒரு குருவாக ஜெர்மனியில் அந்நாட்டு மொழியைக் கற்றுக்கொண்டிருந்தபோது, அவருக்கு இருமாதங்கள் தன் வீட்டில் தங்குமிடம் கொடுத்தவர். தன் வயதையும் பொருட்படுத்தாமல் திருத்தந்தையைக் காண வந்திருந்த இந்த அம்மையாரை பாராளுமன்ற தலைவர் மார்டின் சுல்ஸ், திருத்தந்தைக்கு முன் அழைத்து வந்தார். திருத்தந்தையும் நன்றிப்பெருக்கோடு அந்த அம்மையாரைத் தழுவி சிறிது நேரம் தனியாக உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.